கும்மிடிப்பூண்டி : தேசிய நெடுஞ்சாலையின் அணுகு சாலை அடிக்கடி பழுதாவதால், தரமாக அமைக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் எதிரே, மேம்பாலம் உள்ளது.அதன்கீழ், சென்னையில் இருந்து, ஆந்திரா நோக்கி செல்லும் அணுகு சாலை வழியாக, தினசரி நுாற்றுக்கணக்காக கரி லோடு லாரிகள் செல்கின்றன.அதிக பாரம் கொண்ட அந்த லாரிகள், அந்த அணுகு சாலையில் 300 மீட்டர் கடந்து, சித்தராஜகண்டிகையில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையத்திற்கு செல்கின்றன.கனரக வாகனங்களின் பாரம் தாங்காமல் அந்த இடைப்பட்ட அணுகு சாலை அடிக்கடி பழுதாகிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அவ்வப்போது சீர் செய்தாலும், மீண்டும் பழுதாகி போக்குவரத்துக்கு லாயக்கற்று படுமோசமாக மாறுகிறது.இதனால், அந்த சாலை வழியாக தாசில்தார் அலுவலகம், சார்- - பதிவாளர் அலுவலகம், அகதிகள் முகாம், சிந்தலகுப்பம் செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.அந்த சாலையை கடக்கும் கனரக வாகனங்களின் பாரத்தை கணக்கிட்டு, அதற்கு ஏற்ப தரமான சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.