காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு, தி.மு.க., - அ.தி.மு.க., - தே.மு.தி.க., வேட்பாளர்கள் பலர், எமகண்டம் முடிந்து ஒரே நேரத்தில் வேட்பு மனு அளிக்க, தங்கள் படைசூழ வந்ததால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.உத்திரமேரூர் ஒன்றிய உள்ளாட்சி பதவியிடங்களுக்கு போட்டியிட, தி.மு.க., - அ.தி.மு.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர்.
வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ள உத்திரமேரூர் - செங்கல்பட்டு சாலையில், 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் தொலைவில் என, இருபுறங்களில் போலீசார் தடுப்பு அமைத்தனர்.கரை வேட்டி, கட்சி கொடியுடன் வாகனங்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தோரை தடுத்து நிறுத்தி, வேட்பாளரையும், முன்மொழிபவரையும் மட்டுமே அனுமதித்தனர்.எமகண்டம் முடிந்து, ஒரே நேரத்தில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால், உத்திரமேரூர் - செங்கல்பட்டு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதில், செங்கல்பட்டு நோக்கிச் சென்ற 'ஆம்புலன்ஸ்' வாகனம் ஒன்று நெரிசலில் சிக்கியது. அங்கு, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் துரிதமாக செயல்பட்டு, ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தினர்.சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியான, தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் கார், வேன், மினி பஸ் ஆகியவற்றில் வந்தனர். அவர்கள் சர்வீஸ் சாலையை ஆக்கிர மித்து வாகனங்களை நிறுத்தியதால், தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது; பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டனர்.வேட்பு மனு தாக்கல் துளிகள் உத்திரமேரூர் ஒன்றியத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்கள் தங்களது பலத்தைக் காட்ட, 100 நாள் வேலை உறுதி திட்ட பெண் பணியாளர்களை பணம், பிரியாணி கொடுத்து அழைத்து வந்தனர். வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய நிறைய பேர் வந்ததால், சமூக இடைவெளி, முக கவசம் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கை எதுவும் பின்பற்றப்படவில்லை. இந்த தேர்தலில் பெண்களுக்கு பல இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால், மனு தாக்கல் செய்யப்படும் இடத்தில் பெண்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. போட்டியிடும் பெண்கள் தங்கள் கணவருடன் வந்தனர். இருவருக்கும் கட்சியினர், ஆதரவாளர்கள் பெரிய மாலை அணிவித்து, ஊர்வலமாக அழைத்து சென்றனர். தி.மு.க., - அ.தி.மு.க., மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் பலர் வேட்பு மனு தாக்கல் செய்ததும், தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக கருதி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.நிருபர்கள் வெளியேற்றம்வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏராளமானோர் வந்தனர்; அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, வேட்பாளர், முன்மொழிபவரை மட்டும் உள்ளே அனுமதித்தனர்.
கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். அதை புகைப்படம் எடுக்க வந்த நிருபர்களை வெளியேற்றும் பணியில், டி.எஸ்.பி., பிரவீன்குமார் மற்றும் போலீசார் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, அங்கு வந்த வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜ்குமார், ''நிருபர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது என, மேலிடத்தில் இருந்து உத்தரவு; அதற்கான அரசாணை இருக்கிறது,'' என கூறிவிட்டு சென்றார். 'மக்களுக்கு சொல்லும் கடமை ஊடகத்திற்கு உள்ளது. அதற்கு ஏன் அரசு முட்டுக்கட்டை போடுகிறது?' என, நிருபர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.