எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க!சைபர் கிரைம் போலீசார் பட்டியல் :ஆன்லைனில் உஷாரா இருக்கணும் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க!சைபர் கிரைம் போலீசார் பட்டியல் :ஆன்லைனில் உஷாரா இருக்கணும்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2021
01:33

பெ.நா.பாளையம்:சைபர் கிரைம் குற்ற நடவடிக்கைகளில் இருந்து, பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள, பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, போலீஸ் ஸ்டேஷன்களில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.தொழில்நுட்பங்கள் பெருகப்பெருக, சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. ஆன்லைன் மோசடிகள் தினமும் புதிது, புதிதாக முளைத்துக்கொண்டே வருகின்றன.போலீசார் தரப்பிலும், தொடர்ந்து விழிப்புணர்வு தகவல்கள் வெளியிடப்படுகின்றன.போலீஸ் ஸ்டேஷன்களில், மாவட்ட சைபர் கிரைம் சார்பில், இதுதொடர்பான அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.அதில், வேலை வாங்கி தருவதாக கூறி, 'ஆன்லைன்' வாயிலாக, முன் பணம் செலுத்த வேண்டும் என்று, யாராவது கூறினால், அதை நம்ப வேண்டாம்.உங்களுடைய மொபைல் எண்ணுக்கு வரும் தவறான 'லிங்கு'களின் இணைப்பில் சென்று பார்ப்பதைத் தவிர்க்கவும்.இணையத்தில் பகிரப்படும் கவர்ச்சிகரமான, வர்த்தக தள்ளுபடி களை நம்பி, ஏமாற வேண்டாம்.ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கும்போது, யாராவது, உங்களுக்கு, தானாக வந்து உதவி செய்வதாக கூறினால், மறுத்து விடவும்.கஸ்டமர் கேர் எண்களை, கூகுளில் தேடும் போது, கவனம் தேவை. தவறான எண்களை தொடர்பு கொள்வதன் வாயிலாக, ஏமாறும் வாய்ப்பு மிக அதிகம்.பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை, முகநுால், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தவிர்த்தல் நல்லது. ஓ.எல்.எக்ஸ்., வாயிலாக, ராணுவத்தில் பணிபுரிவதாகக் கூறி, பொருள்களை, குறைந்தவிலையில் தருவதாக கூறுவதை, நம்ப வேண்டாம்.'ஆன்லைன்' மூலம் பழக்கமாகும், அறிமுகம் இல்லாத நபர்களிடம், 'வீடியோகால்' வாயிலாக பேசுவதை, முற்றிலும் தவிர்க்க வேண்டும்.உங்களது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு, வெகுநேரமாக நெட்வொர்க் சிக்னல் கிடைக்கவில்லை என்றால், உடனடியாக உங்களது வங்கி கணக்கை முடக்கி கொள்வது நல்லது.உங்களது உறவினர் மற்றும் நண்பர்கள் பெயரில், போலியான முகநுால் அக்கவுண்ட் உருவாக்கப்பட்டு, அதன் வாயிலாக தங்களிடம் அவசர தேவைக்காக பணம் கேட்கலாம், கவனம் தேவை.தங்கள் நிலத்தில், மொபைல் டவர் அமைக்க உள்ளோம் என்று யாராவது கூறினால், அதை நம்ப வேண்டாம்.ஏ.டி.எம்., கார்டு, கிரெடிட் கார்டு ஓ.டி.பி., மற்றும் இதர வங்கி தகவல்களை பகிர்தல் கூடாது என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இது தொடர்பான, புகார்களை, cybercrime.gov.in இணையதள முகவரியில் தெரிவிக்கலாம்.இவ்வாறு, அந்த அறிவிப்பு பலகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X