மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே, கே.டி.எல்.,- -வேடபட்டி இணைப்பு ரோடு அகலப்படுத்தும் பணி நடக்கிறது.மடத்துக்குளம் தாலுகா துங்காவியிலிருந்து, வேடபட்டி நால்ரோடு வரை, ஆறு கி.மீ., நீளத்தில் மாநில சாலை உள்ளது. இந்த இடத்திலிருந்து, இரண்டு கி.மீ., தொலைவில் கே.டி.எல்., பகுதியில் தேசிய நெடுஞ்சாலையுடன் இந்த ரோடு இணைகிறது.மலையாண்டிபட்டிணம், ஜோத்தம்பட்டி, செங்கன்டிபுதுார் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களும், உடுமலை - தாராபுரம் ரோட்டிலிருந்து மடத்துக்குளத்துக்கு வரும் பயணிகளும் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர்.மடத்துக்குளம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில், எதிர்பாராதவிதமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் போது உடுமலை, தாராபுரம் மற்றும் இதர பகுதிகளுக்குச்செல்ல கே.டி.எல்.,- வேடபட்டி ரோடு மாற்றுப்பாதையாக பயன்படுத்தப்படுகிறது.தினமும் பலநுாறு வாகனங்கள் பயன்படுத்தும் இந்த ரோடு, 30 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய போக்குவரத்துக்கும், வாகனப்பயன்பாட்டுக்கும் தகுந்தபடி அமைக்கப்பட்டது.பல ஆண்டு பயன்பாட்டினால், பல இடங்களில் சேதமடைந்திருந்த இந்த ரோட்டை அகலம் செய்து, புதுப்பிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்தநிலையில், கடந்த ஆண்டு துங்காவியிலிருந்து வேடபட்டி வரை, தேவையான இடங்களில் ரோடு அகலப்படுத்தி புதுப்பிக்கப்பட்டது.தற்போது வேடபட்டி நால் ரோட்டிலிருந்து, இரண்டு கி.மீ., தொலைவிலுள்ள கே.டி.எல்., வரை ரோடு அகலம் படுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது.