தாம்பரம், செப். 21-திருட்டு வழக்கில் மீட்கப்பட்ட மொபைல் போன்கள், நேற்று உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.கிண்டியைச் சேர்ந்தவர் லோகேஸ்வரன். ஆக., 27ம் தேதி, கிண்டியில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு மின்சார ரயிலில் பயணம் செய்த போது, அவரது மொபைல் போன் திருடப்பட்டிருந்தது.
தாம்பரம் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார்.போலீசார் விசாரித்து, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கமாண்டோ குமார், 21 என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 26 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.இந்த மொபைல் போன்கள், நேற்று உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ரயில்வே டி.எஸ்.பி., ஸ்ரீகாந்த் கூறுகையில், ''ரயில் பயணியருக்கு உதவவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ரயில்வே போலீசார், 24 மணிநேரமும் விழிப்புடன் செயல்படுகின்றனர். ''திருடு போகும் பொருட்கள் குறித்து புகாரளிக்க, 1512 மற்றும் 99625 -00500 என்ற எண்களை பயணியர் தொடர்பு கொள்ள வேண்டும்,'' என்றார்.திருட்டு கும்பல் தலைவன் எங்கே?மொபைல் போன் திருடர்களில், கமாண்டோ குமார் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்; இந்த வழக்கில மீதமுள்ள ஐந்து பேர் கைது செய்யப்படவில்லை. இதில், கமாண்டோ குமாரின் தலைவனாக செயல்பட்ட விதார்த் மற்றும் அவருடன் இருந்த நான்கு பேரையும், போலீசார் கைது செய்யவில்லை. அவர்களின், புகைப்படங்களும் போலீசாருக்கு கிடைக்கவில்லை என, கூறப்படுகிறது. அவர்களை பிடிக்க ரயில்வே காவல் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களில், கமாண்டோ குமார் உட்பட ஐந்து பேரையும், மொபைல் திருடுவதற்காகவே, வடமாநிலங்களில் இருந்து, அழைத்து வந்து, விதார்த் பயிற்சி கொடுத்து செயல்பட வைத்தது தெரியவந்துள்ளது.