கடலுார் : கடலுாரில் பருவமழை முன்னெச்சரிக்கையாக வாய்க்கால்கள் துார் வாரும் பணியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் துவக்கி வைத்தார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால் வாய்க்கால்கள் அனைத்தும் துார் வாரப்படுகிறது.
கடலுார் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் வாய்க்கால்களை துார்வாரும் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி கடலுார் சொரக்கல்பட்டில் நடந்தது. கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். அய்யப்பன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்று மழைநீர் வடிகால் வாய்க்கால்களை துார்வாரும் பணியை தொடங்கி வைத்தார். இந்த பணி வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. கடலுார் நகராட்சியில் 151 கி.மீ., துாரம் கால்வாய் சுத்தம் செய்யும் பணி 16 வாகனங்கள் மூலம் தினமும் நடக்கும். இந்த பணிகளை மேற்பார்வையிட பொறுப்பு அலுவலர்களை நியமித்து, மழைநீர் தேங்கும் மிகவும் அபாயகரமான பகுதிகளில் தீவிர கண்காணித்து, பெரிய மழைநீர் வடிகால், நடுத்தர வடிகால், சிறிய வடிகால் என வகைப்படுத்தி துாய்மை பணிகளுக்கு தேவையான இயந்திரங்களை பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.துாய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை முறையாக அணிய வேண்டும். துாய்மை பணி மேற்கொள்ளும் இடங்களில் ஆக்கிரமிப்பு இருப்பின், முன்னதாக உரியவர்களுக்கு தெரிவித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்நிகழ்ச்சியில் எஸ்.பி., சக்திகணேசன், கூடுதல் கலெக்டர்கள் ரஞ்சித்சிங், பவன்குமார் கிரியப்பனவர், ஆர்.டி.ஓ.,அதியமான் கவியரசு, தாசில்தார் பலராமன், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, தி.மு.க., நகர செயலாளர் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.