கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுச்சாவடி பணியாளர்கள் பணியை ஏற்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக அக்டோர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடக்கிறது. இதற்காக 1,889 ஓட்டுச் சாவடிகளுக்கு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஓட்டுப்பதிவு பணியாளர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வரும் 24ம் தேதியும், 2ம் கட்ட பயிற்சி 29ம் தேதியும் கடைசி பயிற்சி தேர்தலுக்கு முந்தைய நாளான அக்டோபர் 5ம் தேதி மற்றும் 8ம் தேதி ஆகிய நாட்களில் நடக்கிறது.ஓட்டுச்சாவடி பணியாளர்கள் அப்பணியினை ஏற்க மறுத்தால் தமிழ்நாடு ஊராட்சி தேர்தல் விதி மற்றும் தமிழ்நாடு ஊராட்சி சட்டத்தின்படி அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வழிவகுக்கும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அனைத்து தேர்தல் அலுவலர்களும் கட் டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழை தங்களது கைப்பேசியின் மூலமாக பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப் பட்ட அனைத்து பணியாளர்களும் தங்களது பயிற்சி வகுப்பில் தவறாமல் கலந்து கொண்டு தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.