ரயில் பாதை கடக்க தவிக்கும் மாணவர்கள்; ரோடு சேதத்தால் அதிக துாரம் சுற்றும் மக்கள் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
ரயில் பாதை கடக்க தவிக்கும் மாணவர்கள்; ரோடு சேதத்தால் அதிக துாரம் சுற்றும் மக்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2021
07:19

சிவகாசி : ரயில் பாதை கடக்க ரயில் செல்லும் வரை காத்துகிடக்கும் மாணவர்கள், ரோடு சேதத்தால் அதிக துாரம் சுற்றிவரும் மக்கள் என ஆனையூர் ஊராட்சி மக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.



சிவகாசி ஒன்றியத்தில் உள்ள இந்த ஊராட்சி கட்டளைப்பட்டி, அய்யம்பட்டி, ஆசாரி காலனி, ராமச்சந்திர புதுார், இந்திரா நகர், சிவானந்தம் நகர், அண்ணாமலையார் காலனி, முனீஸ் நகர் உட்பட 34 கிராமங்களை உள்ளடக்கி உள்ளது. இங்கு சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படாதது முக்கிய பிரச்னையாக உள்ளது. பள்ளி கல்லுாரி செல்வதற்காக மாணவர்கள் ரயில் பாதையை கடக்க காத்திருந்து அவதிப்படுகின்றனர். ஒவ்வொரு முறையும் ரயில் செல்லும்போது இதை கடக்க குறைந்தது 40 நிமிடங்கள் ஆகிறது.



இதே பகுதியில் ரோடு சேதத்தால் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. பஸ் ஸ்டாப் அருகில் உள்ள குளத்தில் கழிவுகள் தேங்கி உள்ளது. இப்பகுதியின் கடை உரிமையாளர்கள் இங்கேயே குப்பை கொட்டுகின்றனர். ஏ.லட்சுமியாபுரம் பகுதியில் ஓடை துார்வாரப்படாமல் கழிவுகள் தேங்கி சுகாதாரக் கேட்டினை ஏற்படுத்துகிறது. இப்பகுதியில் சமத்துவபுரம் செல்லும் ரோட்டில் உள்ள பாலம் சேதமடைந்துள்ளது. அண்ணாமலையார் காலனி கடைசி பகுதியில் ரோடு சேதமடைந்துள்ளது. இப்பகுதியில் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.



ரோடு சேதத்தால் சுற்றல்



தங்கப்பாண்டியன், சமூக ஆர்வலர்: ஆனையூர் தேவர் சிலையிலிருந்து நீதிமன்றம் செல்லும் ரோட்டில் சேதமடைந்த மின்கம்பங்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இப்பகுதி விளாம்பட்டி செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது.இந்த ரோட்டில் வாகனங்கள் சென்றுவர மிகவும் சிரமமாக உள்ளது. ரோடு சேதத்தால் இப்பகுதியினர் இரட்டை பாலம் வழியாக அதிக துாரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது.



கோரிக்கைகள் பலவும் நிறைவேற்றம்



லட்சுமி நாராயணன் ஊராட்சி தலைவர்: ஊராட்சியில் நீண்ட நாள் கோரிக்கைகள் பலவும் நிறைவேற்றப்பட்டுள்ளன .ஆசாரி காலனி 5 வது தெரு ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் ரோடு ,டெய்லர் காலனியில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் சாக்கடை, சிமென்ட் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. அய்யம்பட்டி, லட்சுமியாபுரம், இந்திரா நகரில் சுகாதார வளாகம், மேல்நிலைத் தொட்டிகள், அய்யம்பட்டியில் மயான ரோடு அமைக்கப்பட்டுள்ளது. லட்சுமியாபுரம், சிலோன் காலனி, ஆசாரி காலனியில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. எந்த குறைகள் என்றாலும் உடனடியாக நிறைவேற்றப்படும்.



தேவை ரயில் மேம்பாலம்



முத்துமாரி துணைத் தலைவர்: சாட்சியாபுரம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைப்பதற்காக எத்தனையோ ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறோம். ஊராட்சி தரப்பிலும் இது குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் மேம் பாலம் அமைத்து பொதுமக்களின் சிரமத்தை போக்க வேண்டும்.பேவர் பிளாக் அமைக்க நிதிகவிதா, ஒன்றிய கவுன்சிலர்: பாரதிநகர், இந்திரா நகரில் தெருக்களில் சாக்கடை, பேவர் பிளாக் ரோடு அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் நடைபெறும். மேலும் கவுன்சிலர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படும்.



வசதிகள் நிறைவேற்றம்



முத்துலட்சுமி, ஒன்றிய தலைவர்: ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து அனைத்து வேலைகளும் நடைபெறும்.ஊராட்சியில் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X