ஈரோடு: பெண்களை ஆபாச படம் எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு கைதான, ஆர்.ஐ., சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சிவகிரி அருகே கொல்லாங்கோவிலை சேர்ந்தவர் சதீஷ்குமார், 33, திருமணமானவர். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலக சீனியர் வருவாய் ஆய்வாளராக (ஆர்.ஐ.,), 2014 முதல் பணி செய்கிறார். அலுவலக பெண் ஊழியர் சிலரையும், அலுவலகத்துக்கு வந்து செல்லும் பெண்கள், கலெக்டர் அலுவலக பிற தளங்களில் உள்ள பெண்களை, மொபைல்போனில் படம் பிடித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டார். புகாரின்படி ஈரோடு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அவர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.அச்சத்தை போக்கணும்: ஆர்.ஐ., சதீஷ்குமார், கலெக்டர் அலுவலகத்தின் பல்வேறு தளங்களில், பெண்கள் கழிப்பறைகளில் போனை வைத்து புகைப்படம் எடுத்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதனால் பெண் ஊழியர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. 'தவறான பதிவுகள் அவர் வெளியிட்டிருந்தால், தொழில் நுட்ப அலுவலர்கள் கொண்டு, அவற்றை முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் கலெக்டர், எஸ்.பி., தனிக்கவனம் செலுத்தவேண்டும்' என்று பெண் ஊழியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.