ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த மாரண்டப்பள்ளி அருகே உள்ள கிருஷ்ணேகவுனப்பள்ளியை சேர்ந்தவர் ராமசாமி மனைவி வெங்கடம்மா, 75. கணவர் இறந்த நிலையில், ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். சின்னாறு அணை அருகே நேற்று ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு முக கவசம் அணிந்து வந்த வாலிபர், மூதாட்டியை தாக்கி கீழே தள்ளி, அவர் காதில் அணிந்திருந்த, இரண்டு பவுன் தங்க கம்மலை பறிக்க முயன்றார். மூதாட்டி வெங்கடம்மாவிற்கு வலி ஏற்பட்டதால், வாலிபர் காலில் விழுந்த மூதாட்டி, கழற்றி கொடுப்பதாக கெஞ்சினார். ஆனால் அதை பொருட்படுத்தாமல், வாலிபர் கம்மலை பறித்து சென்றார். இதனால், மூதாட்டியின் இரு காதிலும் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர், முக கவசம் அணிந்திருந்ததால், மூதாட்டியால் அடையாளம் காண முடியவில்லை. இது தொடர்பாக, சூளகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர். மூதாட்டிகளை குறிவைத்து திருடும் இதுபோன்ற வாலிபர்களை போலீசார் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.