கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தைகளுடன் பெண்கள் தீக்குளிக்க முயற்சித்தனர். கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் காணொலி காட்சியில் நடந்தது. ஊராக உள்ளாட்சி தேர்தலால் அதுவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மட்டும் மனுக்களை போட்டு செல்கின்றனர். இந்நிலையில், வெள்ளியணையை சேர்ந்த சரஸ்வதி, 33, கவுசல்யா, 26, ஆகியோர், தங்களின் குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு, நேற்று வந்தனர். கேனில் இருந்த மண்ணெண்ணெயை குழந்தைகள் மற்றும் தங்கள் மேல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். விசாரணையில் பெண்கள் கூறியதாவது: கடந்த, 1997-98ல் இலவச வீட்டுமனை பட்டா கொடுக்கப்பட்டது. எங்கள் குடும்பத்தில் வறுமை காரணமாக, அதனை ஈடாக வைத்து, 62 ஆயிரம் ரூபாய், கடன் பெற்றுள்ளோம். இதற்குரிய வட்டியுடன், கடனை அடைத்து விட்டோம். இருந்தபோது, இன்னும் கடன் தொகை பாக்கி உள்ளது என்று கூறி, பட்டாவை திரும்ப தர பைனான்சை சேர்ந்தவர்கள் மறுத்து விட்டனர். அந்த இடத்தை வேறு பெயருக்கு மாற்ற முயற்சி நடந்தது. போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.