மதுரை : துாத்துக்குடியில் அரசால் மூடி சீல் வைக்கப்பட்ட குடோனிலிருந்து தாது மணல் கடத்தப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி ராஜா தாக்கல் செய்த மனு:
துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தாது மணல் நிறுவனங்களால் பிரித்தெடுக்கப்பட்டு, சேமித்து வைக்கப்பட்ட மினரல் குடோன்களை தமிழக அரசு மூடி சீல் வைத்தது. துாத்துக்குடி குடோனில் சட்டவிரோதமாக சீல் அகற்றப்பட்டு, வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு நிறுவனத்தில் 'டைட்டானியம் டையாக்சிட்' தயாரிப்பதற்காக, இலுமினேட் மினரல்ஸ் லாரிகளில் ஆக.,20 ல் கடத்தப்பட்டது.
துாத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்தனர். அது இறக்குமதி மினரல்ஸ் என்பதற்கு பில்கள் இருப்பதாக நிறுவனம் கூறுகிறது. ஆனால் ஜி.எஸ்.டி., சட்டத்தின் கீழ் சரியாக பதிவு செய்யாமல், போலீசார் வழக்குப் பதிந்த பின்பே கடத்தப்பட்ட மினரல்ஸ்க்கு பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் சரியாக விசாரிக்கவில்லை. வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு ராஜா மனு செய்தார்.
நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்தார்.வி.வி.மினரல்ஸ் தரப்பு: வழக்கை ரத்து செய்யக்கோரி இந்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது. தாக்கல் செய்ய அவகாசம் தேவை என தெரிவித்தது.நீதிபதி விசாரணையை செப்.,27 க்கு ஒத்திவைத்தார்.