ஈரோடு: ''கடந்த, 10 ஆண்டுகளில் கட்டப்பட்ட வீட்டு வசதி வாரிய வீடுகளில் முறைகேடு நடந்துள்ளதா என ஆய்வு நடக்கிறது. உரிய ஆதாரம் இருந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்று, அமைச்சர் முத்துசாமி கூறினார்.
ஈரோட்டில் காசிபாளையம் ஓடை தூர்வாரும் பணியை, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, நேற்று தொடங்கி வைத்து கூறியதாவது: காசிபாளையம் ஓடையில், 15 நாட்களில் பொது அமைப்பு சார்பில் தூர்வாரப்படும். தொடர்ந்து பிற ஓடை, கால்வாய் தூய்மைப்படுத்தப்படும். சோலார், அரச்சலூரில் புதிய பஸ் ஸ்டாண்ட் என மாவட்டத்தை மேம்படுத்த, 85 திட்டப்பணி தயாரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஐந்து, ஆறு பாலங்கள் இந்தாண்டு ஆய்வு செய்து துவங்கப்படும். வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்ட கட்டடங்கள், ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலை உதவியுடன் கட்டட உறுதித்தன்மை பரிசோதிக்கப்படும். கடந்த, ?? ஆண்டுகளில் கட்டப்பட்ட வீட்டு வசதி வாரிய வீடுகளில் முறைகேடு நடந்துள்ளதா என ஆய்வு நடக்கிறது. உரிய ஆதாரம் இருந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஈரோடு நல்லகவுண்டன்பாளையத்தில், குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கட்டப்பட்டு வருகிறது. அதனருகே மாற்றுத்திறனாளிகள், 85 பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. அவ்விடம் கரடுமேடாக உள்ளதால், அதை சரி செய்ய வெடி வைக்க வேண்டி உள்ளது. வெடி வைத்தால், அடுக்குமாடி வீடுகள் பாதிக்கும். எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு வேறிடத்தில் வீட்டுமனை ஒதுக்கப்படும். மாநகர பகுதி ஆக்கிரமிப்பில் வசித்தவர்களுக்கு, வீட்டுமனை அல்லது வீடு வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.