கரூர்: மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு நேற்று காலை, 17 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன், 12ல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. துவக்கத்தில் வினாடிக்கு, 3,000 கன அடியில் இருந்து, 15 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது. பிறகு, கர்நாடகா மாநில அணைகளில் இருந்து குறைந்தளவே மேட்டூருக்கு தண்ணீர் வந்தது. இதனால் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு இறுதியாக, 3,000 கன அடி மட்டுமே திறந்து விடப்பட்டது. இந்நிலையில், மேட்டூருக்கு தண்ணீர் வரத்து கூடியதால் கடந்த சில நாட்களுக்கு முன், 16 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது. இதனால், கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 17 ஆயிரத்து, 392 கன அடி தண்ணீர் வந்தது. குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில், 16 ஆயிரத்து, 372 கன அடியும், நான்கு கிளை வாய்க்காலில், 1,020 கன அடியும் திறக்கப்பட்டது. கதவணை பகுதியில், 10 மி.மீ., மழை பெய்தது.
* அமராவதி அணை நிலவரம்: கரூர் மாவட்ட குடிநீர் மற்றும் சம்பா சாகுபடி தேவைக்காக, உடுமலைபேட்டை அமராவதி அணையிலிருந்து, இரண்டாம் கட்டமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அமராவதி அணைக்கு, 295 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில், 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. புதிய வாய்க்காலில், தற்காலிகமாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம், 88.72 அடியாக இருந்தது.