வாரச்சந்தைக்கு தடை விதிக்கும் அதிகாரிகள்: 300 குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிப்பு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
வாரச்சந்தைக்கு தடை விதிக்கும் அதிகாரிகள்: 300 குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 செப்
2021
01:57

பொள்ளாச்சி:ஆனைமலை வட்டாரத்தில் வாரச்சந்தை போட தடை விதித்துள்ளதால், 300 குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக, வாரச்சந்தை சிறுவியாபாரிகள் சப் - கலெக்டரிடம் மனு அளித்தனர்.ஆனைமலை, கோட்டூர், வேட்டைக்காரன்புதுார், ஒடையகுளம் உள்ளிட்ட பகுதிகளில், ஒரு ஊரில், வாரத்தில் ஒரு நாள் வாரச்சந்தை போட்டு, காய்கறி, பழங்கள் உள்ளிட்ட மக்களின் அன்றாட தேவைக்கான பொருட்களை சிறு வியாபாரிகள் வியாபாரம் செய்து வந்தனர். அவர்களுக்கு, சந்தை அமைத்து கடை போட அதிகாரிகள் தடை விதித்துள்ள நிலையில், வியாபாரிகள் சப் - கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:ஆனைமலை வட்டாரத்தில், வாரச்சந்தை வியாபாரத்தை நம்பி, 300 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், கொரோனா பரவலை காரணம் காட்டி, பல மாதங்களாக கடை போட, அதிகாரிகள் அனுமதி மறுக்கின்றனர். இதனால், வருவாய் இழந்து, குழந்தைகள் கல்வி, மருத்துவம் மட்டுமின்றி அன்றாட வாழ்க்கை நடத்தவே வழியின்றி தவிக்கிறோம்.தொற்று பரவல் தடுப்பு விதிகளை முறையாக கடைப்பிடித்து, நாங்கள் சந்தை அமைத்து கடை போட அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.லஞ்சம் விளையாடுது!வியாபாரிகள் கூறுகையில், 'எங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் ஒடையகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட வேட்டைக்காரன்புதுாரில், ரோட்டோரம் ஏழு கடைகள் நடத்த பேரூராட்சி அதிகாரிகள் பணம் வாங்கிக் கொண்டு அனுமதிக்கின்றனர்.நாங்கள் வாரம் ஒரு நாள் கடை போடச் சென்றால், எங்களை மிரட்டி விரட்டுகின்றனர். எங்களை வெளியேற்றி விட்டு, அங்கு கடைகள் செயல்பட சத்தமின்றி அனுமதிக்கின்றனர். பொள்ளாச்சி பகுதியில் வாரச்சந்தை நடத்த அனுமதி அளிக்கப்படும் நிலையில், ஆனைமலை பகுதி அதிகாரிகள், தனிப்பட்ட முறையில் செயல்படுகின்றனர். தங்களது பாக்கெட்டை நிரப்புவதிலேயே குறியாக உள்ளனர்,' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X