காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், தேர்தல் விதிமுறைகள் சரிவர பின்பற்றப்படுவதில்லை. தேர்தல் அதிகாரிகளும், அரசியல் கட்சியினரும்'சிண்டிகேட்' அமைத்து, தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனரோ என, பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல், அடுத்த மாதம் 6ம் தேதி முதற்கட்டமாகவும், 9ம் தேதி இரண்டாம் கட்டமாகவும் நடைபெற உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 மாவட்ட கவுன்சிலர், 98 ஒன்றிய கவுன்சிலர், 274 ஊராட்சி தலைவர், 1,938 வார்டு உறுப்பினர் என, 2,321 பதவிகளுக்கு, ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள், வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
விதிமீறல்
காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை, தேர்தல் விதிமுறைகள் சரிவர பின்பற்றப்படுவது இல்லை. வேட்புமனு தாக்கல் செய்வதிலேயே பல விதிமீறல்கள் நடக்கும் நிலையில், விதிகளின்படி தேர்தல் நடைபெறுமா? என, கேள்வி எழுகிறது.வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், மேளதாளங்களுடன், 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் வருகின்றனர். வேட்புமனு தாக்கல் செய்ய 10 முதல் 15 பேர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்குள் நுழைகின்றனர். வேட்புமனு தாக்கலுக்கு பின் உடன் வந்த நுாற்றுக்கணக்கானோருக்கு 'கூல்டிரிங்' மற்றும் மது பானங்கள், பிரியாணி என பலவகையில் கவனிக்கின்றனர்.
இவை அனைத்தும் தேர்தல் விதிமீறல்.இவற்றை போலீசாரும் கண்டுகொள்வதில்லை; தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. வேட்புமனு தாக்கல் செய்யும்போது, ஒருவர் மட்டுமே வர வேண்டும் என தெரிந்தும், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் எதையும் கண்டுகொள்ளாமல், 10 பேருடன் வந்து வேட்புமனு கொடுத்தாலும், சிரித்த முகத்துடன் வாங்கிக்கொள்கின்றனர்.அரசியல் கட்சியினரும் தேர்தல் அதிகாரிகளும் 'சிண்டிகேட்' எனும் கூட்டு சேர்ந்து, தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனரோ என, பலருக்கும் சந்தேகம் எழுந்து உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆளுங்கட்சியின் கொடிகளைக்கூட எந்த கிராமத்திலும் அகற்றவில்லை. கிராம ஊராட்சி செயலர்கள், அரசியல்வாதிகளின் விசுவாசியாக இருப்பதனாலேயே, தேர்தல் விதிகளை மதிப்பதில்லை. மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ஆர்த்திக்கு, இதுபோன்ற விதிமீறல்கள் குறித்து தெரிந்தும் நடவடிக்கை எடுப்பதாக இல்லை. காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு என, தேர்தல் பார்வையாளராக ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக அமுதவல்லி என்பவரை, மாநில தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
எதிர்பார்ப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வந்த தேர்தல் பார்வையாளர், சங்கரா கல்லுாரி, அண்ணா பொறியியல் கல்லுாரிகளில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணிக்கை மையங்களை பார்வையிட்டு சென்றார். வேட்புமனு தாக்கல் நடைபெறும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு சென்றிருந்தால், அங்கு நடைபெறும் அப்பட்டமான விதிமீறல்களை கண்கூடாக பார்த்திருக்க முடியும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் விதிமீறல்கள் குறித்து, தேர்தல் பார்வையாளராவது நடவடிக்கை எடுப்பாரா என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
வேட்புமனு வழங்க, நேற்றைவிட இன்று, இன்னும் அதிகமான கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்ய வேண்டும். வேட்பாளர் மற்றும் முன்மொழிபவர் உள்ளே செல்லலாம் என, தேர்தல் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் இன்றும், 10க்கும் மேற்பட்டோர் செல்ல முயற்சிப்பர். போலீசார் அவர்களை தடுத்து, விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படவில்லை
உள்ளாட்சி தேர்தல், லோக்சபா தேர்தல், சட்ட சபை தேர்தல் என, எந்த தேர்தலாக இருந்தாலும், தேர்தல் அறிவிக்கப்பட்ட அடுத்த ஓரிரு நாட்களில், மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும்.அக்கூட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை அனைத்து கட்சியினருக்கும் 'பிரின்ட்' எடுத்து கொடுப்பர். தேர்தல் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால், என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவிப்பார். ஆனால் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று வரை, அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவில்லை.
கொரோனா தடுப்பு நடவடிக்கை இல்லை
காஞ்சிபுரம் ஒன்றியம் தம்மனூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு, அப்பகுதி தி.மு.க.,வை சேர்ந்த தயாளன் என்பவரும், கீழம்பி ஊராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க.,வை சேர்ந்த ஒருவரும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அதேபோல், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க.,வைச் சேர்ந்த சுகுமார் மனைவி நித்யா வேட்புமனு தாக்கல் செய்தார். காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட இரு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு, தி.மு.க., சார்பில் ஒருவர் வேற்று வேட்புமனு தாக்கல் செய்தார் இவர்கள் அனைவரும் தங்கள் கெத்தை காட்ட, ஏராளமானோருடன் வந்தனர். வந்தவர்களில் பெரும்பாலானோர் சமூக விலகலை கொஞ்சம்கூட கடைபிடிக்கவில்லை. அங்கிருந்த போலீசாரும் அதை கண்டுகொள்ளவில்லை.