கமுதி : கமுதி பேரூராட்சிக்குட்பட்ட வார்டில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். பலமுறை புகார் அளித்தும் பயனில்லை என மக்கள் குமுறுகின்றனர்.கமுதி பேரூராட்சிக்குட்பட்ட 14 வார்டு வெள்ளையாபுரம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.அடிப்படை வசிதிகளான தண்ணீர், கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு,சாலை இல்லாததால் கடந்த பலவருடங்களாக மக்கள் சிரமப்படுகின்றனர்.
கிராமதலைவர் ராமலிங்கம் கூறியதாவது: தெருக்களில் கழிவுநீர் கால்வாய் வசதியில்லாததால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.மழைநீருடன் கழிவுநீர் கலந்து இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று பரவும் அபாயம் உள்ளது. சுந்தரம்பாள் ஊரணியில் படிக்கட்டு வசதியில்லாததால் ஆபத்தான முறையில் குளித்து வருகின்றனர். ஊரணி துார்வாரப்படாததால் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது.
கிராமத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என்று பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் பேரூராட்சி அதிகாரிகள் புறக்கணித்து வருகின்றனர்.அப்பகுதியை சேர்ந்த அமிர்தம் கூறியதாவது:எங்கள் பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் என்பது கானல் நீராகவே உள்ளது.பலஆண்டுகளாகவே குடிப்பதற்கு ஊரணி அருகே உள்ள கிணற்று தண்ணீர், டிராக்டரில் வரும் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறோம். அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்தி வந்த தண்ணீர் குழாய் சேதமடைந்து உள்ளதால் மக்கள் சுகாதார வளாகத்தில் வரும் தண்ணீரை பிடிக்க வேண்டிய நிலை உள்ளது.
அப்பகுதியை சேர்ந்த தர்மர் கூறியதாவது: கமுதி-சாயல்குடி சாலை வெள்ளையாபுரம் கிராமத்தில் தெருவிளக்கு சரிவர இல்லாததால் இரவு நேரத்தில் விபத்து ஏற்படுகிறது.மழைகாலத்தில் தண்ணீர் செல்ல வழியில்லாததால் சாலைகள் சேறும் சகதியுமாக நடப்பதற்கே பயனற்ற சாலையாக உள்ளது. தேங்கிநிற்கும் கழிவுநீரை இளைஞர்கள் உதவியுடன் சீரமைத்து வருகின்றோம். தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் வெள்ளையாபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர்,சாலை,கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தரவேண்டும், என்றார்.