திருவாடானை : கருமொழியில் புதிய பள்ளி கட்டடம் கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
திருவாடானை அருகே கருமொழியில் அரசு தொடக்கப்பள்ளி இருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடந்த போது அக் கட்டடம் இடிக்கப்பட்டு அதில் சாலை பணி நடந்தது. மாணவர்கள் ஊராட்சிக்கு சொந்தமான சேவை மையத்தில் படிக்க துவங்கினர்.புதிய பள்ளி கட்டடம் கட்ட அரசு புறம்போக்கு இடம் ஒதுக்கப்பட்டது.சர்வ சிக் ஷா அபியான் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. ஆனால் பணிகள் துவங்கவில்லை.
திருவாடானை உதவி கல்வி அலுவலர்கள் கூறியதாவது: ஒதுக்கப்பட்ட புறம்போக்கு இடத்தை எங்களிடம் முறையாக ஒப்படைக்கவில்லை. ஆகவே பணிகளை துவக்க முடியவில்லை, என்றனர்.வருவாய்த்துறையினர் கூறியதாவது- அந்த இடத்தில் சர்வே செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கபட்டது. இன்னும் கல்வித்துறையினருக்கு நிலம் ஒப்படைப்பதற்கான அனுமதி வரவில்லை என்றனர். ஊராட்சி தலைவர் முத்துராமலிங்கம் கூறியதாவது- விரைவில் பள்ளிகள் திறக்க இருப்பதால் பள்ளி கட்டடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.