பா.ம.க., முக்கிய நிர்வாகிகள் அ.தி.மு.க.,வில் திடீர் ஐக்கியம் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
பா.ம.க., முக்கிய நிர்வாகிகள் அ.தி.மு.க.,வில் திடீர் ஐக்கியம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2021
04:04

திண்டிவனம்-திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சண்முகம் முன்னிலையில் பா.ம.க., நிர்வாகிகள் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து பா.ம.க., வெளியேறுவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.தேர்தல் சமயத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க., தனித்து போட்டியிடுவது அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில் திண்டிவனத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாசுடன் ஆரம்ப காலத்திலிருந்து கட்சியில் இணைந்து பணியாற்றிய முக்கிய நிர்வாகிகள் பலர், திண்டிவனத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் முன்னிலையில் நேற்று மாலை 6:30 மணியளவில் இணைந்தனர்.பா.ம.க., மாநில துணைத் தலைவர் ஏழுமலை, செயற்குழு உறுப்பினர் மலர் சேகர், முன்னாள் நகர செயலாளர் வடபழனி, பேச்சாளர் இளங்கோ, பொதுக்குழு உறுப்பினர் ரங்கநாதன், நகர வன்னியர் சங்கத் தலைவர் ஞானவேல், மாநில மாணவரணி துணைச் செயலாளர் வீர சம்பத், முன்னாள் கவுன்சிலர்கள் சவுந்தர், ராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர், முன்னாள் அமைச்சருக்கு சால்வை அணிவித்து, அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.கட்சியில் இணைவது குறித்து மாநில துணைத் தலைவர் ஏழுமலை மற்றும் நிர்வாகிகள் கூறுகையில், 'நாங்கள் 1980ம் ஆண்டு வன்னியர் சங்கம் துவங்கியதிலிருந்து ராமதாசுடன் இணைந்து பணியாற்றி வந்துள்ளோம்.அவரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு கட்சிக்கு உழைத்தோம். ஒவ்வொரு முறையும் உள்ளாட்சித் தேர்தலின் போது கூட்டணியை விட்டு பா.ம.க., வெளியே வந்துவிடும். எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி., தேர்தலில் மட்டும் கூட்டணி வைக்கின்றனர்.அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து பா.ம.க., வெளியேறியது எங்களுக்கு விருப்பமில்லை. பெரும்பாலான நிர்வாகிகளுக்கு பிடிக்கவில்லை.தற்போது முதல் கட்டமாக நிர்வாகிகள் சேர்ந்திருக்கிறோம். முறைப்படி பெரிய அளவில் முன்னாள் அமைச்சர் சண்முகம் முன்னிலையில் பா.ம.க.,வினர் கட்சியில் இணைய உள்ளனர்' என்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X