புதுச்சேரி-''ராஜ்யசபா எம்.பி., பதவிக்கான பா.ஜ., வேட்பாளர் செல்வகணபதி, புதுச்சேரி மாநில வளர்ச்சிக்குப் பாடுபடுவார்'' என, மாநில பா.ஜ., பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா கூறினார் அவர் நேற்று அளித்த பேட்டி:புதுச்சேரி ராஜ்யசபா எம்பி., தேர்தல் குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., மற்றும் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களுடன் பேசப்பட்டது. இதில், பா.ஜ., சார்பில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு என்.ஆர்.காங்., ஆதரவு கொடுத்துள்ளது. மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களும் ஆதரவு தெரிவித்தனர். இதற்காக முதல்வர் ரங்கசாமி, கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.ராஜ்யசபா வேட்பாளர் செல்வகணபதி, புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு பெரியளவில் பங்களிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு இணைப்பாக இருந்து செயல்படுவார். தேர்தலின்போது, புதுச்சேரியில் வணிகம், கல்வி, சுற்றுலா, ஆன்மிகம் ஆகியவற்றின் வளர்ச்சியை முக்கிய சுலோகமாக பிரதமர் மோடி கூறியிருந்தார். அதனடிப்படையில் புதுச்சேரி வளர்ச்சிக்கு பாடுபடுவோம். உள்ளாட்சி தேர்தல் மற்றும் வரும் 5 ஆண்டுகளில் எந்த தேர்தல் வந்தாலும் பா.ஜ.,- என்.ஆர்.காங்., கூட்டணி தொடரும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பது முதல்வரின் விருப்பமாக இருந்தால் அதுவே எங்களின் விருப்பமாகும்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது பா.ஜ., மாநிலத் தலைவர் சாமிநாதன், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்சரவணன்குமார், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பொதுச்செயலர் மோகன்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.