அரியாங்குப்பம்-தவளக்குப்பம் அருகே விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கடன் தொகையை கேட்டு திட்டியதால், கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தவளக்குப்பம் அடுத்த டி.என். பாளையத்தை சேர்ந்தவர் அனந்தராமன் என்கிற முருகன், 51; விவசாயி. கடந்த 20ம் தேதி வயலில் வேலை செய்து கொண்டிருந்த அனந்தராமனை, இரண்டு வாலிபர்கள் கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு, தப்பிச் சென்றனர். தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்தனர். இன்ஸ்பெக்டர் முத்துகுமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து, கொலையாளிகளை தேடி வந்தனர். கொலை தொடர்பாக, டி.என்.பாளையத்தை சேர்ந்த சக்திவேல் மகன் சண்முகம், 22, சிவஞானம் மகன் சதிஷ், 23; ஆகிய இரண்டு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். தேடுவார்நத்தம் ஏரிக்கரையில், பதுங்கியிருந்த அவர்களிடம் இருந்து இரண்டு கத்திகள், மோட்டார் பைக், இரண்டு மொபைல் போன்களை போலீசார் கைப்பற்றினர்அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதாவது:தனது வீட்டுக்கு எதிரே வசிக்கும் சண்முகம் குடும்பத்தினருக்கு, அனந்தராமன் பணம் கடன் வாங்கிக் கொடுத்துள்ளார்.அந்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டு, அனந்தராமனின் மனைவி தனபாக்கியம், அவரது மகன் ஆகியோர் சேர்ந்து, சண்முகத்தின் தாயை திட்டி உள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த சண்முகம், அனந்தராமனை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, சம்பவத்தன்று, தனது நண்பர் சதிஷ் உடன் சேர்ந்து, டி.என்.பாளையம் ஏரிக்கரையில் மதுகுடித்து விட்டு, வயலில் வேலை செய்த அனந்தராமனை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளனர்.இந்த கொலை வழக்கு தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.