திருக்கோவிலுார்-திருக்கோவிலுார் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர் வரத்து துவங்கியுள்ளது.திருக்கோவிலுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது. குறிப்பாக தென்பெண்ணை ஆற்றில் நீர் வரத்து துவங்கியுள்ளது.இதன் காரணமாக திருக்கோவிலுார் அணைக்கட்டுக்கு விநாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இவை ராகவன் வாய்க்கால், பம்பை வாய்க்கால், மலட்டாறு உள்ளிட்ட கால்வாய்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து, தென்பெண்ணை ஆற்று பாசன விவசாயிகள் சம்பா நெல் சாகுபடியை குறிப்பிட்ட நாட்களில் துவங்க பிரகாசமான சூழல் உருவாகியுள்ளது.அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை துவங்க இருக்கும் நிலையில், தற்போது நீர்நிலைகளுக்கு தண்ணீர் வர தொடங்கியிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.