கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 3.40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பைபாஸ் சந்திப்பில் தனி தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, தலைமைக் காவலர் கேசவன், போலீஸ்காரர் ராஜராஜன், நெடுஞ்சாலைத்துறை ராஜேந்திரன் ஆகியோர் கொண்ட பறக்கும் படை எண்.8 குழுவினர் நேற்று இரவு வாகன சோதனை மேற்கொண்டனர்.7:30 மணியளவில், அவ்வழியாகச் சென்ற 'பொலிரோ' காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணங்களின்றி 2 லட்சம் ரூபாயை சங்கராபுரம் அடுத்த அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த அந்துவான் மகன் ஜூலியன், 32; எடுத்துச் சென்றது தெரிந்தது. பறக்கும்படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.இதேபோன்று, அந்தவழியாக யமஹா பைக்கில், கள்ளக்குறிச்சி அடுத்த எரவார் வடக்குதெருவைச் சேர்ந்த இளங்கோவன், 40; என்பவர் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.இருவரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கள்ளக்குறிச்சி தேர்தல் அலுவலர் நடராஜனிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். துணை பி.டி.ஓ., ஆறுமுகம் உடனிருந்தார்.