பண்ருட்டி-ஒப்பந்த செவிலியர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும் என த.வா.க., தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;கொரோனா தொற்று பாதிப்பில் சிகிச்சை அளித்த செவிலியர்களின் பங்கு முக்கியம். மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் ஆகிய உளவியல் பிரச்னைகளால் செவிலியர்கள் சிலர் பாதித்தாலும், மக்களுக்கு சிறந்த முறையில் தொண்டு செய்தனர்.எம்.ஆர்.பி., போட்டித் தேர்வின் மூலம் கடந்த ஆட்சியில் 15 ஆயிரம் செவிலியர்களை தேர்வு செய்தனர். அவர்கள் ஒப்பந்த முறையில் ரூ. 15,000 மாத ஊதியத்தில் பணி செய்கின்றனர்.இரண்டு ஆண்டுகளுக்கு பின் பணி நிரந்தரம் செய்யப்படும் என, உறுதியளித்தனர். ஆனால் 6 ஆண்டுகளில் 3 ஆயிரம் பேர் மட்டுமே நிரந்தரம் செய்யப்பட்டனர்.மீதமுள்ள 12,000 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். நிரந்தர செவிலியர்களுக்கு இணையாகப் பணி செய்யும் ஒப்பந்த செவிலியர்களுக்கு 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற சமத்துவத்தை நிறுவ வேண்டும்.ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் பணிபுரியும் பல்நோக்கு மருத்துவ ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.இவ்வாறு அவர், கூறியுள்ளார்.