கோவை : ''ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் பிரச்னைகளை ஆராய, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தமிழக அரசு குழு அமைக்க வேண்டும்,'' என, தேசிய துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் கூறினார்.அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
கோவையில் துாய்மை பணியாளர்களிடம் பி.எப்., தொகை பிடித்தம் செய்திருக்கின்றனர். எவ்வளவு தொகை கணக்கில் இருக்கிறது என அவர்களுக்கு தெரிவதில்லை. குழு அமைத்து தீர்வு காண, மாநகராட்சி கமிஷனருக்கு பரிந்துரைத்துள்ளேன். கொரோனா தொற்று பரவிய காலத்தில் பணிபுரிந்த துாய்மை பணியாளர்களுக்கு நற்சான்று, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதற்கு மாநகராட்சிக்கு பாராட்டுக்கள்.ஒப்பந்த தொழிலாளர்கள் நெருக்கடிகளுக்கு இடையே கஷ்டப்பட்டு பணிபுரிகின்றனர். 5 நிமிடம், 10 நிமிடம் தாமதமானாலும் அவர்களை வேலையை விட்டு துாக்குவது; பி.எப்., பிடித்தம் செய்வதில்லை; பிடித்தம் செய்தாலும், பி.எப்., அலுவலகத்தில் செலுத்துவதில்லை. இ.எஸ்.ஐ., இன்சூரன்ஸ் வசதி இல்லை. ஓய்வு நேரம் இல்லை; கழிப்பறை வசதி இல்லை.ஒப்பந்த முறையில் ஊழல் நடக்கிறது. ஒப்பந்த முறையை தமிழக அரசு ஒழித்து, அனைவரையும் நிரந்தரமாக்க வேண்டும். ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஆராய, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், குழு அமைத்து, தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு, வெங்கடேசன் கூறினார்.