கோவை : எந்தவொரு துறையிலும் இல்லாத அவநிலை, போக்குவரத்து துறையில் நிலவுவதாக போக்குவரத்துக்கழக ஊழியர்கள் தமிழக முதல்வரிடம் குமுறியுள்ளனர்.
கோவை கோட்ட அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள், முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கு, மற்ற துறைகளில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு போன்று அனைத்துவித படிகளும் வழங்கப்படுகின்றன; ஆனால், தொழிலாளர்களுக்கு மறுக்கப்படுகிறது. அகவிலைப்படி நிலுவைத்தொகை, போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு மட்டும் வழங்கப்படாமல் உள்ளது.தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட, வருங்கால வைப்புநிதி பணம் (பி.எப்.,), கழக தேவைக்கு செலவு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் மருத்துவ செலவு, பிள்ளைகள் திருமண செலவு, கல்வி கட்டணம் ஆகியவற்றுக்கு வழங்காமல் இழுத்தடிக்கும் அவலநிலை உள்ளது.இப்படி, எந்தவொரு துறையிலும் இல்லாத அவலநிலை போக்குவரத்து கழகத்தில் மட்டுமே உள்ளது. தலைமை செயலகத்துக்கு கோரிக்கை மனு அனுப்பினாலும், நேரில் வழங்கினாலும், போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு மட்டும் விடிவு காலம் பிறக்கவில்லை.
எந்த மனுவாக இருந்தாலும், போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கே திருப்பி அனுப்பப்படுகிறது.ஓய்வூதியர்கள் மீதோ, தொழிலாளர்கள் மீதோ எந்தவித அக்கறையும் இல்லாததை கடந்த ஆட்சியில் பார்த்தோம்; தற்போதும் பார்த்து வருகிறோம். ஆனால் இது தொடரக்கூடாது; மாற வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.