மனித கழிவு அகற்றும் பணிகளில் தூய்மை பணியாளர்கள் கூடாது ஆணைய குழுவின் தலைவர் உத்தரவு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
மனித கழிவு அகற்றும் பணிகளில் தூய்மை பணியாளர்கள் கூடாது ஆணைய குழுவின் தலைவர் உத்தரவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2021
05:20


கோவை : ''எந்தவொரு சூழலிலும் துாய்மை பணியாளர்களை, மனித கழிவுகளை அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது,'' என அதிகாரிகளுக்கு, தேசிய துாய்மை பணியாளர் ஆணைய குழுவின் தலைவர் வெங்கடேசன் உத்தரவிட்டார்.கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனமக்கள், துாய்மை பணியாளர்கள் மற்றும் அனைத்து நலக்குழு உறுப்பினர்களிடம் குறை கேட்கும் கூட்டம் நேற்று நடந்தது.இதில், தேசிய துாய்மை பணியாளர் ஆணைய குழுவின் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்து குறைகளை கேட்டறிந்தார். இதில், அவர் கூறியதாவது: அரசின் நலத்திட்ட உதவிகளை துாய்மை பணியாளர்கள் பெறுவதற்கு, தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடனுதவி திட்டங்களை முறைப்படி செயல்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எந்த ஓர் சூழலிலும், துாய்மை பணியாளர்களை மனித கழிவு அகற்றுவதில் ஈடுபடுத்தக்கூடாது. பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் பகுதிகளில், சுத்தம் செய்யும் பணிகளுக்கு துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ரோபோ இயந்திரங்களை பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஊதிய முறைகள், பணி ஓய்வுக்குரிய பணப்பலன்கள் எவ்வித காலதாமதமின்றி சரிவர வழங்கிடவும், இவர்கள் வசிக்கும் இடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், பணிபுரியும் காலமுறைக்கு ஏற்ப ஊதிய உயர்வு வழங்கவும், சிறப்பு மருத்துவ முகாம் போன்றவற்றில் அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். இக்கூட்டத்தில், கலெக்டர் சமீரன், போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர், எஸ்.பி., செல்வநாகரத்தினம், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் உள்ளிட்ட, பல்வேறு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். 'துாய்மை பணியாளர்களுக்கு ஆணையம் துணை நிற்கும்'கொரோனா தொற்று பரவிய காலத்தில் பணிபுரிந்த துாய்மை பணியாளர்களுக்கு நற்சான்றிதழ், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, சித்தாபுதுார் மாநகராட்சி பள்ளியில் நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் தலைமை வகித்தார்.அதில், தேசிய துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் பேசுகையில்,''கொரோனா பரவிய காலத்தில் பணிபுரிந்த துாய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை உடனடியாக வழங்க வேண்டும். கொரோனா தொற்றால் உயிரிழக்கும் துாய்மை பணியாளர் குடும்பத்துக்கு, 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.ஆணையம் பற்றிய விழிப்புணர்வு, துாய்மை பணியாளர்களிடம் இல்லை. பிரச்னையை, ஆணையத்தின் இணைய தளத்துக்கோ, மொபைல் போனுக்கு 'வாட்ஸ்ஆப்' மூலமாக குறுஞ்செய்தியாக அனுப்புங்கள். தீர்வு காண, உங்களுக்கு துணை நிற்கும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X