சென்னையில், மழை நீர் வடிகால்களை துார் வாரும் பணி இலக்கு நிர்ணயித்து, அதன் படி துரித கதியில் நடந்து வருகிறது.
'மாபெரும் மழை நீர் வடிகால் துாய்மை பணி முகாம்' வாயிலாக, இலக்கை விட கூடுதல் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில், கொசஸ்தலை ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் அமைக்கும் பணி, திருவொற்றியூர், மணலி, மாதவரம் ஆகிய மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த மண்டலங்களை தவிர்த்து, மற்ற 12 மண்டலங்களில் உள்ள 2,070 கி.மீ., நீளமுள்ள 9,224 மழை நீர் வடிகால்களில், 9.96 கோடி ரூபாய் செலவில் துார்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இதுவரை 401.75 கி.மீ., நீளமுள்ள, 2,458 மழை நீர் வடிகால்களில் துார்வாரும் பணிகள் முடிவுற்றுள்ளன. மேலும், இம்மாதம், 18ம் தேதி முதல், 25ம் தேதி வரை, 'மாபெரும் மழை நீர் வடிகால் துாய்மை பணி முகாம்' அறிவிக்கப்பட்டது. இதில், சென்னை மாநகராட்சியில் 74.33 கி.மீ., நீளத்துக்கு துார்வார இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.துார் வாரும் பணிகள் துவங்கிய நிலையில், தமிழக தலைமை செயலர் இறையன்பு, அப்பணிகளை சமீபத்தில் பார்வையிட்டார். மாநகராட்சி கமிஷனர் ககன் தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகள் மேற்பார்வையில், மாநகராட்சி முழுதும், தீவிர கதியில் துார் வாரும் பணிகள் நடந்து வருகின்றன. மாபெரும் மழை நீர் வடிகால் துார்வாரும் முகாம் காலக்கெடு முடிவதற்குள், சென்னையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட, கூடுதலாக துார் வாரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.அதன்படி, நேற்று முன்தினம் வரை, 82.76 கி.மீ., நீளத்துக்கு மழை நீர் வடிகால்கள் துார்வாரப்பட்டுள்ளன.இது குறித்து, சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமார் கூறியதாவது:அக்டோபர் இரண்டாம் வாரத்திற்குள், மாநகரில் அனைத்து பகுதிகளிலும், மழை நீர் வடிகால், வண்டல் வடிகட்டி தொட்டி போன்றவை துார்வாரப்பட்டு, சிரமமின்றி மழை நீர் செல்ல வழிவகை செய்யப்படும். இது தவிர, 948 இடங்களில் சிறு பழுதுகள் உள்ள வடிகால்களும் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், 6,891 இடங்களில், 'மேன்ஹோல்' எனப்படும் பாதாள சாக்கடை நுழைவு மூடி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.இதன் வாயிலாக, வரும் பருவமழையில், சென்னையில், மழை நீர் தேங்காத நிலை உருவாக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -