திருமங்கலம்-திருமங்கலம் சிக்னல் அருகே, விதிமீறி நிறுத்தப்படும் 'ஷேர்' ஆட்டோக்களால், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.சென்னையில், மற்ற இடங்களை விட, அண்ணா நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில், ஷேர் ஆட்டோக்களின் பயன்பாடு அதிகளவில் உள்ளது. குறிப்பாக, திருமங்கலம் சிக்னல் பகுதியில் இருந்து, பாடி, அம்பத்துார், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களுக்கு பயணிப்போர் அதிகம். இந்த ஷேர் ஆட்டோக்களால், காலை மற்றும் மாலை நேரங்களில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதே சமயம், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, சாலைகளை ஆக்கிரமித்து, விதிமீறி வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். குறிப்பாக, திருமங்கலம் சிக்னல் அருகே உள்ள பகுதியில், சாலையோரத்தை ஆக்கிரமித்து ஆட்டோக்கள் அதிகளவில் நிறுத்தப்படுகின்றன. போலீசார் பலமுறை எச்சரித்தும், விதிமீறி வருகின்றனர்.அரசு பஸ் நிறுத்தும் இடங்களிலேயே, வழிமறித்தும் ஆட்டோக்களை நிறுத்துகின்றனர். சாலையோரத்தில் செல்வோரை கண்டால், திடீரென வாகனத்தை அங்கும், இங்குமாக நிறுத்தும் ஆட்டோ ஓட்டுனர்களால், விபத்து ஏற்பட்டு வருகிறது.விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.