கொரட்டூர்-கழிவு நீர் பிரச்னைக்கு பாம்புகளுடன் சென்று, பெண்கள் புகார் செய்தனர் என்ற, நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, நேற்று கழிவு நீர் அகற்றப்பட்டது.
சென்னை அம்பத்துார் அடுத்த கொரட்டூர், 83வது வார்டு, சீனிவாசபுரம் காந்தி நகரில், பாதாள சாக்கடை அடைப்பால் கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கியது. இதனால், அங்கு வசிப்போர் சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவித்தனர்.மேலும், அருகில் உள்ள ஏரிக்கரையில் இருந்து படை எடுக்கும் பாம்புகளாலும் அச்சத்திற்கு ஆளாகினர். இதனால் அதிருப்தியடைந்த பெண்கள், நேற்று முன்தினம் மாலை, பாம்புகளை பிடித்து அட்டை பெட்டியில் அடைத்து, கொரட்டூரில் உள்ள சென்னை குடிநீர் வாரிய அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.இதனால், அங்கிருந்த அதிகாரிகள், கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்தனர். இது பற்றிய செய்தி, நேற்று நம் நாளிதழில் வெளியானது.இதையடுத்து குடிநீர் வாரியத்தினர், காந்தி நகரின் தெருக்களில் தேங்கிய கழிவு நீரை, டேங்கர் லாரி மூலம் அகற்றியதுடன், பாதாள சாக்கடை அடைப்பையும் அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.