தாம்பரம்--வெள்ள தடுப்பு நடவடிக்கையாக, தாம்பரம், செம்பாக்கம் நகராட்சிகளில், மழைநீர் கால்வாய்களை துார்வாரும் பணிகள், துரிதமாக நடந்து வருகின்றன. வடகிழக்கு பருவ மழை, விரைவில், துவங்க உள்ளதால், உள்ளாட்சி அமைப்புகள் தோறும், மழை நீர் கால்வாய் துார்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி, தாம்பரம் நகராட்சியில், மேற்கு மற்றும் கிழக்கு தாம்பரம் என, இருபுறமும் சேர்த்து, 160.75 கி.மீ., துாரமும்; செம்பாக்கத்தில், 38 கி.மீ., துாரமும் கால்வாய் வாரும் பணிகள் நடந்து வருகின்றன.கால்வாய் துார்வாரும் பணிகளுடன், சுத்தம் செய்யப்பட்ட கழிவுகளுடன், குளோரின் பவுடர் தெளிப்பது, தெரு விளக்கு சீரமைப்பது உள்ளிட்ட பணிகளையும், நகராட்சிகளின் பொறியியல் மற்றும் சுகாதார பிரிவு அதிகாரிகள் இணைந்து மேற்கொள்ள உள்ளனர்.இப்பணிகள், ஒருபுறம் நடந்தாலும், இரண்டு நகராட்களிலும், பல இடங்களில் முறைகேடாக, மழை நீர் கால்வாய்களில், கழிவு நீர் விடுவது தொடந்து நடந்து வருகிறது. அவற்றை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.