பல்லாவரம்--பல்லாவரம் கிழக்கு பகுதியில் உள்ள குடியிருப்புகளில், பயனீட்டாளர் மின் அளவீடு செய்வதில், மின்வாரிய ஊழியர்கள் அலட்சியம் காட்டி வருவதால், ஒவ்வொரு முறையும் அதிக கட்டணம் செலுத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டிஉள்ளனர்.
பல்லாவரம் கிழக்கு பகுதிக்குட்பட்ட, அம்பேத்கர் நகர், சுபம் நகர் 1 மற்றும் 2, கிருஷ்ணா, ஜெயலட்சுமி, காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிகளில், சமீபகாலமாக, மின் அளவீடு எடுக்கும் பணி முறையாக நடப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், ஒவ்வொரு முறையும், எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது தெரியாமல், அப்பகுதி மக்கள் குழப்பமடைகின்றனர். இது குறித்து, உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதே நிலை தொடரும் பட்சத்தில், மின் துறை அமைச்சரை நேரில் சந்தித்து புகார் தெரிவிக்க, பல்லாவரம் கிழக்கு பகுதி நலச்சங்க நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.இது குறித்து, சுபம் நகரை சேர்ந்த எம்.கிருஷ்ணமூர்த்தி, 69, கூறியதாவது:எங்கள் பகுதியில் மின் அளவீடு கணக்கெடுக்கும் பணி முறையாக நடப்பதில்லை. நீண்ட காலமாக இந்த பிரச்னை தொடர்கிறது. தாம்பரம் செயற்பொறியாளரை நேரில் சந்தித்து, புகார் தெரிவித்தோம். நான்கு மாதங்கள் ஆகியும், பிரச்னை தீர்க்கப்படவில்லை. அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டினால், மின் துறை அமைச்சரிடம் நேரில் புகார் அளிப்பதை தவிர வேறு வழியில்லை. ஒட்டுமொத்த நலச்சங்கமும் சேர்ந்து, புகார் மனு எழுதி, அதில் கையெழுத்து பெற்று அமைச்சரிடம் சமர்ப்பிப்போம். இவ்வாறு, அவர் கூறினார்.