ஊத்துக்கோட்டை--கணவரின் சாவில் மர்மம் இருப்பதாக, அவரது மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.பெரியபாளையம் அடுத்த, காரணி கிராமத்தைச் சேர்ந்தவர் கவுதமன், 32. தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வந்தார்.பொன்னேரி அடுத்த, ஆவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அமுலு, 28. நர்சாக பணியாற்றி வருகிறார். இருவரும் காதலித்து வந்த நிலையில், பெற்றோருக்கு தெரியாமல், கடந்தாண்டு சென்னை, அடையாறில் உள்ள சர்ச்சில் திருமணம் செய்து கொண்டனர்.ஆவூர் கிராமத்தில் வசித்து வந்த, இவர்களுக்கு, கடந்த மாதம் 18ம் தேதி, பெண் குழந்தை பிறந்தது.கடந்த 17ம் தேதி கவுதமனின் தாத்தா இறந்ததாக வந்த தகவலை அடுத்து, கவுதமன் காரணி கிராமத்திற்கு சென்றார். பின், அவர் வீடு திரும்பவில்லை. கவுதமை தேடி அமுலுவின் சகோதரர், காரணி கிராமத்திற்கு சென்றார். அங்கு கவுதமன் இறந்ததாக போஸ்டர் ஒட்டி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.அமுலு விசாரித்ததில், கவுதமன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், உடலை எரித்து விட்டதாகவும் கூறினர்.இது குறித்து அமுலு ஆரணி போலீஸ் நிலையத்தில், தன் கணவர் சாவில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவித்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.