காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் சி.எஸ்.எம்., நகராட்சி மேல்நிலைப் பள்ளி வெளியில், கடந்த வாரம் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிலர் கத்தியுடன் அங்கு கூடியது, அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.இது குறித்து அறிந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மாணவர்கள் எதிர்காலத்தை கருதி, அப்பள்ளியில் படிக்கும், 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு நேற்று, போலீசார் கவுன்சிலிங் நடத்தினர்.காவல் துணை கண்காணிப்பாளர் முருகன், ஆய்வாளர் திருநாவுக்கரசு, உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.போலீசார் பேசியதாவது:குற்றச்செயலில் ஈடுபடுவோரின் வாழ்க்கை நிலை சீரழிந்து போகும். படிக்கும் காலத்தில் அந்த பணியை நன்கு செய்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். ஆசிரியர்கள் சொல்லும் புத்திமதியை மாணவர்கள் மதித்து, அதன்படி நடந்து கொண்டால் வாழ்க்கை அழகாகும். உங்களின் பெற்றோருக்கு பெருமை ஏற்படும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.