பல்லடம் : பல்லடத்தில், பேக்கிங் மெஷின் வெடித்து வணிக வளாகம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.பல்லடம், என்.ஜி.ஆர்., ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நேற்று அதிகாலை, 4.30 மணிக்கு புகை வந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
வணிக வளாகத்தின் தரைத்தளத்தின் கீழ் உள்ள குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால், தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்ல முயற்சித்தனர். ஆனால், நெடியுடன் கூடிய புகையால், உள்ளே செல்ல இயலவில்லை. இதனால், முதல் தளத்தில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.தொடர்ந்து, ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் தரைத்தளம் சென்ற தீயணைப்பு வீரர்கள், கடும் புகை மூட்டத்தின் இடையே தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நான்கு மணி நேர போராட்டத்துக்கு பின் தீ கட்டுக்குள் வந்தது.பேக்கிங் மெஷின் ஆன் செய்யப்பட்ட நிலையில் இருந்ததால், ஓவர் லோடு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த வணிக வளாகத்தை சுற்றிலும் கடைகள், குடியிருப்புகள் ஏராளமாக உள்ளன. தீயணைப்பு வீரர்களின் முயற்சியால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.