உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு, 15ல் துவங்கி நேற்றுடன் முடிந்தது. வேட்பு மனு தாக்கலின்போது உடன் அழைத்து வரப்பட்ட ஆண்களுக்கு, வேட்பாளர்கள் சரக்கு வகைகளை தாராளமாகவே வாங்கி ஊற்றிஉள்ளனர்.உத்திரமேரூர் மல்லியங்கரணை சாலையில், இரு டாஸ்மாக் கடையில் வழக்கத்தைவிட இந்த ஒரு வாரத்தில் மட்டும் பல லட்சம் ரூபாய்க்கு மது விற்கப்பட்டுள்ளதாம்.வார நாட்களில் 4.50 - 5 லட்சம் ரூபாயும்; விடுமுறை, முகூர்த்த நாட்களில் 6.50 லட்சம் ரூபாயும் மது வகைகள் விற்பனை செய்யப்படுமாம். ஆனால், வேட்புமனு நடந்த வாரத்தில் மட்டும் கூடுதலாக விற்கப்பட்டதாம். அதிலும் பவுர்மணி நாளான திங்கட்கிழமையில், இரு கடைகளிலும் தலா 2லட்சம் ரூபாய்க்கு மேல் கூடுதலாக கல்லா கட்டப்பட்டதாம். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டாஸ்மாக் வருவாய் பல கோடிகளை தொட்டதாம். தேர்தல் முடிவில் யார் யாரை அடித்து துாக்குவாரோ தெரியாது. ஆனால், அரசு இப்போதே டாப் கியரில் பறக்கிறது. தேர்தல் முடியும் வரை டாஸ்மாக்கில் வருவாய் மழை தான்!