மாமல்லபுரம்-செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில், அக்., 6ம், 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டிய அவசியத்தை, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் வீடியோவாக பேசி, சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் இரவு பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவில், வாக்காளர் ஒருவர், நான்கு பதவிகளுக்கு ஓட்டளிக்கும் நடைமுறை குறித்து விளக்கப்பட்டுள்ளது. அதேபோல் காஞ்சிபுரம் அடுத்த தாமல் கிராமத்தில், கலெக்டர் ஆர்த்தி தலைமையில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தும் வகையில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும் எரிவாயு உருளைகளில், உள்ளாட்சி தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை கலெக்டர் ஆர்த்தி ஒட்டினார்.தாமலில் அமைக்கப்பட்ட மாதிரி ஓட்டுச்சாவடியில், மக்களை அழைத்து வந்து, ஓட்டுச்சீட்டில் எப்படி ஓட்டளிப்பது என, மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது.