தேனி : மாவட்டத்தில் 53 கால்நடை மருத்துவமனைகளில் 32 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். 21 டாக்டர்கள் பற்றாக்குறையால் கால்நடை மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. காலி பணியிடங்களை நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்நடை வளர்ப்போர் கூறியுள்ளனர்.
மாவட்ட கால்நடைத்துறையில் தேனியில் இணை இயக்குனர் அலுவலகம் உள்ளது. தேனி, பெரியகுளம், போடியில் உதவி இயக்குனர் அலுவலகங்கள் இயங்குகின்றன. இதுதவிர 53 கால்நடை கிளை மருத்துவமனைகள் செயல்படுகின்றன. இதில் 21 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். 32 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் மருத்துவ சேவைப்பணி முற்றிலும் பாதித்துள்ளது.
கூடுதல் சுமை:பணியில் உள்ள டாக்டர்கள் கூடுதலாக 2 அல்லது 3 மருத்துவமனைகளில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டாக்டர் பற்றாக்குறையால் மருத்துவ சேவை கிடைப்பதில் தாமதம் ஆகிறது. குறிப்பாக தொற்றுநோய், கோமாரி, காணை நோய், தடுப்பூசி, காய்ச்சல், வாய் பொருமல், கழிச்சல், மடி நோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உடனடியாக மருத்துவ சேவை கிடைக்காமல் கால்நடைகள் உயரிழக்கின்றனர். இதனால் விவசாயிகள், கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதார ரீதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், துறை மூலம் பதிவு செய்யப்பட்ட 13 ஆயிரம் கால்நடைகள் தவிர விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளும் பயனடையும் வண்ணம், மாவட்ட நிர்வாகம் காலியாக உள்ள கால்நடை மருத்துவ பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.