தேவாரம்: தேவாரம் சாலைத்தெருவில் இருந்து - வஞ்சித்து ஓடை அடிவாரம் செல்லும் பாதையில் பாலம், ரோடு வசதியில்லாததால் விவசாயிகள் விளைபொருட்கள் எடுத்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
தேவாரம் சாலை தெருவிலிருந்து 5 கி.மீ., தொலைவில் வஞ்சித்து ஓடை அடிவாரம் அமைந்துள்ளது. இங்கு 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் கப்பை, சேம்பு, தக்காளி, அவரை உள்ளிட்ட விவசாயம் நடப்பதால் தினமும் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் இப்பாதையில் சென்று வருகின்றனர். ரோடு வசதியின்றி உள்ள பாதையின் இருபுறமும் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் குறுகலான பாதையில் விளைபொருட்களை எடுத்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். தலைச்சுமையாக பொருட்களை எடுத்து செல்கின்றனர்.
பாலம் இல்லாததால் மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாயிகள் தோட்டங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் அவஸ்தை படுகின்றனர்.
ஏ.முத்துமணி, விவசாயி, தேவாரம்: சாலை தெருவிலிருந்து வஞ்சித்து ஓடை அடிவாரம் வரை ரோடு வசதியின்றி மண்பாதையாக உள்ளது. நீண்ட துாரம் நடந்து செல்ல முடியாது என்பதால் டூவீலரை பயன்படுத்தப்படுகிறது. பாதை மோசம் என்பதால் பெண்கள், கூலித்தொழிலாளர்கள் கூடுதல் கட்டணம் கொடுத்து ஆட்டோ, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் பயணிக்கின்றனர். அத்துடன் விளைபொருட்களை வீட்டுக்கு எடுத்து வருவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே ரோடு, பாலம் வசதி செய்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.ராஜ்குமார், விவசாயி, தேவாரம்: வஞ்சித்து ஓடை அடிவார பகுதி மட்டுமின்றி சிறைக்காடு, பெரிய ஓடை, பிள்ளையாரூத்து ஓடை உள்ளிட்ட பகுதிகளுக்கு சாலைத்தெரு வழியாக விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளர்கள் செல்ல வேண்டும். பாலம், ரோடு வசதி இன்றியுள்ள இந்த பாதையில் பயணிக்கும்போது விஷப்பூச்சிகள் இருக்குமோ என்ற பயம் உருவாகிறது. மழைக்கால வெள்ளப்பெருக்கில் அடித்து வரும் மரங்கள் அருகே குடியிருக்கும் வீடுகளுக்குள் சென்று விடுகிறது. விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையான சாலைத்தெருவிலிருந்து -வஞ்சித்து ஓடை வரை ரோடு வசதி செய்து தருவதோடு, தேவையான இடங்களில் பாலம் அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.