திண்டுக்கல் மாவட்டத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்த போதும், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் பல குளங்கள், கண்மாய்கள் சொட்டுத் தண்ணீர் கூடத்தேங்காமல் வறண்டு கிடக்கிறது.
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கசவனம்பட்டி அருகே பாப்பன்குளம் மக்கள் குடிநீருக்காகவும், இதர தேவைக்காகவும் இக்குளத்தின் தண்ணீரையே நம்பியிருந்தனர். போத்திநாயக்கன்பட்டி-, கசவனம்பட்டி கிராமங்களுக்கு இடையே, 30 ஏக்கர் பரப்பில் இக்குளம் பரந்து விரிந்துள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையின் தோணிமலை கரடு, மலையாண்டிபுரம் பகுதிகளே இதன் நீர்பிடிப்பு ஆதாரம். இதற்கான வரத்துநீர் மலையாண்டிபுரம், குயவன்நாயக்கன்பட்டி, திருமல்பட்டி, கிட்டம்பட்டி வழியே குளத்தை வந்தடைகிறது. இதுதவிர குரும்பபட்டி, கரட்டுப்பட்டி வழியேயும் 3 வரத்து வாய்க்கால்கள் தண்ணீர் வழித்தடங்களாக உள்ளன.நேரடி பாசன பரப்பாக 60 ஏக்கர், 2 கி.மீ., சுற்றளவில் 100க்கும் மேற்பட்ட பாசனக் கிணறுகள் இக்குளத்தை ஆதாரமாக கொண்டுள்ளன.
பாப்பன்குளம், போத்திநாயக்கன்பட்டி, கசவனம்பட்டி, மேலதிப்பம்பட்டி கிராமங்களின் ஒரு பகுதியும், வரத்து வாய்க்கால் பகுதியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் நிலத்தடி நீர் ஆதாரத்தை இக்குளம் வழங்கியது. அதிகாரிகள் அலட்சியத்தால் இக்கண்மாய் நிரம்பி 10 ஆண்டுகளாகிறது. போதிய பராமரிப்பின்றி தூர்ந்து கிடக்கும் குளத்தின் தாக்கம், இப்பகுதியை வெகுவாக பாதித்துஉள்ளது.
நஷ்டத்தை சந்திக்கும் விவசாயிகள்
ஏ.மதலைமுத்துராஜ், பாப்பன்குளம்: குடிநீர் வினியோகத்திற்கு நிலத்தடி நீராதாரமாக உள்ள குளத்தின் நீர்வரத்து பாதைகள், முறையாக பராமரிக்கப்படுவதில்லை. குளத்தில் சில ஆண்டுகளாக தண்ணீர் தேங்காததால் விவசாய பணிகள் வெகுவாக முடங்கியுள்ளன. நெல் பயிரிட்ட இடத்தில், மக்காச்சோளம் போன்ற மாற்று சாகுபடிக்கு மாற வேண்டியுள்ளது. கிணற்றுப் பாசன சாகுபடி நடந்தாலும் ஆறு ஆண்டுகளாக விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர். கன்னிவாடியில் இருந்து வரும் வாய்க்காலை தடுத்து தனியார் நிலங்களுக்கு திருப்புகின்றனர். வரத்துக் கால்வாய் கபளீகரம் செய்யப்படுவதுடன், போதிய பராமரிப்பின்றி தூர்ந்துள்ளது. பல இடங்களில் மண் மேவியுள்ளது.கண்மாயை துார்வார வேண்டும்
எஸ்.சந்தானம், போத்திநாயக்கன்பட்டி: கிராமங்களுக்கான கிளைக் கால்வாய்கள் இருந்த சுவடே இல்லாத அளவுக்கு மறைக்கப்பட்டுள்ளன. குளத்தில் ஆக்கிரமிப்பு விவசாயத்தால் நீர் தேங்கும் பரப்பு குறைந்துள்ளது. அடர்ந்துள்ள கருவேலம், சீமைக் கருவேலம், புதர் செடிகளை அகற்றி, கண்மாயை தூர்வார வேண்டும். பல இடங்களில் மேடுகளால் தண்ணீர் குளத்தை வந்தடைவது தடைபடுகிறது. குளத்தின் கரை, மேடு பள்ளங்களுடன் இருப்பதால் விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை. மாணவர்களும் அவதிக்குள்ளாகின்றனர். இங்கு தார் ரோடு அமைக்க, ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.