மதுரை: கோவிட் நோயாளிகளை கண்காணிக்கும் 'வயர்லெஸ் பயோ சென்சார்' இந்தியாவில் மதுரை அரசு மருத்துவமனைக்கு லைப்ைஷன் நிறுவனம் சார்பில் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து நிறுவன இயக்குனர் ஹரி சுப்ரமணியம் கூறியதாவது:இந்தியாவில் பெங்களூரு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு பயோ சென்சார் வழங்கியுள்ளோம். முதன்முறையாக மதுரை அரசு மருத்துவமனைக்கு இலவசமாக வழங்க உள்ளோம். கோவிட் வார்டில் உள்ள நோயாளிகளுக்காக பயோ சென்சார் வழங்கப்படுகிறது. இந்த சென்சாரை நோயாளியின் இடது தோள்பட்டையின் கீழ்ப்பகுதியில் ஸ்டிக்கர் போல பொருத்தினால் தொடர்ந்து 6 நாட்கள் முழுமையாக கண்காணிக்கலாம். குளிக்கும் போதும் கீழே விழாது.பேட்டரியில் இயங்கும்வயர்லெஸ் சென்சார் கருவி இது. இதன் சிக்னல்கள் நர்சிங் ஸ்டேஷனில் உள்ள பெரிய திரையில் நோயாளிகளின் தனித்தனி சிக்னல்களாக தொடர்ந்து காண்பிக்கப்படும்.24 மணி நேரமும் நோயாளியின் சுவாசம், இருதயத்துடிப்பு, ஆக்சிஜன் அளவு, உடலின் வெப்பநிலை மற்றும் உடல் சரியான கோணத்தில் இருக்கிறதா என்பதை தெரிவித்துக் கொண்டே இருக்கும். திடீரென அசவுகரியம் ஏற்பட்டால் நர்சிங் ஸ்டேஷன் திரையில் சிக்னல் காண்பிக்கும்.
அதன் மூலம் உடனடியாக நோயாளியை கண்காணித்து சிகிச்சை அளிக்கலாம். வயர்லெஸ் கருவி என்பதால் நோயாளிக்கு அசவுகரியமாக இருக்காது. நர்ஸ்களும் இரவு முழுவதும் கண்விழித்து ஒவ்வொரு நோயாளியிடமும் உடல்நிலை குறித்த அளவுகளை குறிக்க வேண்டியிருக்காது. மொத்தத்தில் மருத்துவ உலகின் நவீன தொழில்நுட்பமாக இது மாறியுள்ளது.ஆறு நாட்களுக்கு பின் இதிலிலுள்ள பேட்டரியின் ஆயுள் முடிந்துவிடும். ஒருமுறை பயன்படுத்திய பின் மீண்டும் மற்றவர்களுக்கு பயன்படுத்த முடியாது என்றார்.