கூடலூர்: பெரியாறு அணை நீர்த்தேக்க பகுதிகளுக்கு தமிழக அரசு வழங்கும் குத்தகை தொகையை உயர்த்தி தரவேண்டும் என கேரள தரப்பில் வலியுறுத்தியுள்ள நிலையில் மீண்டும் பிரச்னையைத் துாண்டுவதாக தமிழக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழக பொதுப்பணித்துறை செயலர் சந்தீப் சக்சேனா, கேரள நீர்வளத்துறை செயலர் டி.கே.ஜோஸ் ஆகியோர் தலைமையிலான தமிழக--கேரள உயரதிகாரிகளின் கூட்டம் காணொலியில் கடந்த வாரம் நடந்தது. இதில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புப்படி பெரியாறு அணையில் 152 அடி உயர்த்துவது, பேபி அணையை பலப்படுத்தும் பணிகளுக்கு இடையூறாக உள்ள மரங்களை வெட்ட அனுமதி, வல்லக்கடவு வனப்பகுதி வழியாக பெரியாறு அணைக்கு செல்லும் பாதையை சீரமைப்பது, அணைக்கு செல்ல தமிழக அதிகாரிகள் வாங்கிய தமிழன்னை' படகிற்கு அனுமதி உள்ளிட்டவைகள் குறித்து தமிழக அதிகாரிகள் தரப்பில் வாதங்களாக வைக்கப்பட்டது.
இதில் பேபி அணையை பலப்படுத்தும் பணிகளுக்காக 15 மரங்களை வெட்ட விரைவில் வனத்துறையிடம் அனுமதி பெற்று தருவதாகவும், வல்லக்கடவு வனப்பகுதி வழியாக அணைக்கு செல்லும் பாதையை சரிசெய்து தருவதாகவும் கேரள உயரதிகாரிகள் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. மேலும் மின் உற்பத்தி செய்வதை பொறுத்து பெரியாறு அணை நீர்த்தேக்க பகுதிக்கு தமிழக அரசு வழங்கி வரும் குத்தகை தொகை உயர்த்தி வழங்க கேரள அதிகாரிகள் கோரினர். இது தமிழக விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பெரியாறு விவசாய சங்க தலைவர் கே.எம்.அப்பாஸ் கூறுகையில், ஏற்கனவே ஒரு முறை குத்தகை தொகை உயர்த்தி தரப்பட்டுள்ளது. மீண்டும் பிரச்னையை துாண்டும் வகையில் கேரளா இதை முன்வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது' என்றார்.
குத்தகை பணம் எவ்வளவு
பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதி 232.80 சதுர மைல்கள் (ஒருலட்சத்து 48 ஆயிரத்து 992 ஏக்கர்). நீர்மட்டம் 152 அடியாக நிலை நிறுத்தும்போது அணையின் நீர்தேக்கப்பரப்பு 8593 ஏக்கர். இந்நிலத்திற்கு 1886ல் சென்னை ராஜதானி செய்து கொண்ட ஒப்பந்தப்படி திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு தமிழகம் ஆண்டுதோறும் ரூ.40,963 குத்தகை பணம் வழங்கி வந்தது. பின் 1959 முதல் குத்தகை பணம் ரூ.2 லட்சத்து 57 ஆயிரத்து 789 ஆக அதிகரித்து இதுவரை கொடுக்கப்பட்டு வருகிறது.