தி.மு.க., - எம்.பி., நிறுவன தொழிலாளி மரணம் ஜிப்மர் டாக்டர் பிரேத பரிசோதனைக்கு உத்தரவு | சென்னை செய்திகள் | Dinamalar
தி.மு.க., - எம்.பி., நிறுவன தொழிலாளி மரணம் ஜிப்மர் டாக்டர் பிரேத பரிசோதனைக்கு உத்தரவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2021
12:43

சென்னை : கடலுாரில், தி.மு.க., - எம்.பி.,யின் நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளியின் உடலை, புதுச்சேரி ஜிப்மர் டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





பண்ருட்டி தாலுகா, மேலம்பட்டுவைச் சேர்ந்த, செந்தில்வேல் என்பவர் தாக்கல் செய்த மனு:என் தந்தை கோவிந்தராசு, டி.ஆர்.வி. காயத்ரி முந்திரி நிறுவனத்தில், ஏழு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்த நிறுவனம், கடலுார் லோக்சபா எம்.பி.,யான ரமேஷ்க்கு சொந்தமானது. இம்மாதம், 19ம் தேதி வேலைக்கு சென்ற என் தந்தை வீடு திரும்பவில்லை.என் தந்தை, கொலை செய்யப்பட்டுள்ளார். எம்.பி.,யும் அவரது நிறுவன ஊழியர்களும் சேர்ந்து, தாக்கி உள்ளனர். இதுகுறித்து, போலீசில் புகார் அளித்தேன். கொலை வழக்குப் பதிவு செய்யவில்லை. சந்தேக மரணம் என பதிவு செய்தனர். தந்தையின் உடலில் பல இடங்களில் காயங்கள் உள்ளன. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை டாக்டர் முன்னிலையில், பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும்.முறையான, நியாயமான விசாரணைக்காக, இந்த வழக்கை, காடாம்புலியூர் போலீசாரிடம் இருந்து, சி.பி.ஐ.,க்கு மாற்ற உத்தரவிட வேண்டும்.


இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.



போலீஸ் தரப்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.தாமோதரன் ஆஜராகி, ''புகார் வந்த உடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவர்களின் அழுத்தத்தால், போலீசாரை தவறாக சித்தரிக்கிறார்,'' என்றனர்.



மனுவை விசாரித்த, நீதிபதி நிர்மல்குமார் பிறப்பித்த உத்தரவு:



விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள கோவிந்தராசு உடலை, பிரேத பரிசோதனை செய்ய, மூன்று டாக்டர்களை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் நியமிக்க வேண்டும்.பிரேத பரிசோதனையின் போது, மனுதாரர் சார்பில் அவரது பிரதிநிதி ஒருவர் இருக்கலாம். பரிசோதனை முடிந்த உடன், உடலை, மனுதாரரிடம் ஒப்படைக்க வேண்டும். உடலை, எக்ஸ்ரே எடுக்க வேண்டும். இந்தப் பிரச்னையை, அரசியலாக்கக் கூடாது.புலன்விசாரணையை, பண்ருட்டி டி.எஸ்.பி., தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட வேண்டும். கடலுார் எஸ்.பி., கண்காணிக்க வேண்டும்.



இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X