நள்ளிரவில் காவிரியில் பெட்ஷீட் அலசல்: அதிகாரிகள் வந்ததால் கும்பல் ஓட்டம் | ஈரோடு செய்திகள் | Dinamalar
நள்ளிரவில் காவிரியில் பெட்ஷீட் அலசல்: அதிகாரிகள் வந்ததால் கும்பல் ஓட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2021
12:56

ஈரோடு: ஈரோடு காவிரி ஆற்றில் நள்ளிரவில் சாய பெட்ஷீட்களை அலசியபோது மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வந்ததும், வாகனத்தை நிறுத்திவிட்டு கும்பல் தப்பி ஓடியது.


ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரி கரையில் நேற்று நள்ளிரவு, முனியப்பன் கோவில் அருகே சாய ஆலையில் பிரின்டிங் செய்யப்பட்ட பெட்ஷீட் உள்ளிட்ட துணிகளை, '407' வேனில் கொண்டு வந்த சிலர் அலசினர். இரவு, 12:15 மணிக்கு மாசுகட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் உதயகுமாருக்கு போனில் சிலர் தகவல் தெரிவித்தனர். அத்துறை அதிகாரிகளுடன், அங்கு சென்றபோது, சாயத்துணிகளை அலசும் பணியில் ஈடுபட்டவர்கள், '407' வேனை நிறுத்திவிட்டு, துணிகளை ஆற்றில் வீசிவிட்டு ஓடிவிட்டனர்.


இதுபற்றி, மாசுகட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் உதயகுமார் கூறியதாவது: எனக்கு தகவல் கிடைத்த, 30 நிமிடத்துக்குள், இரவு, 12:45 மணிக்குள் சம்பவ இடம் சென்றோம். எங்கள் வாகனத்தை பார்த்ததும், துணிகளை ஆற்றில் போட்டுவிட்டு தப்பி ஓடினர். 407 மாடல் வேனை விட்டு சென்றனர். அந்த வாகனத்தில் நம்பர் பிளேட், பிற ஆவணங்கள் ஏதுமில்லை. போதிய வெளிச்சம் இல்லாததால், அவர்களை பின்தொடர முடியவில்லை. கருங்கல் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததும், எஸ்.ஐ., ஒருவர் வந்து, விபரங்களை சேகரித்தார். எங்கிருந்து துணிகள் எடுத்து வரப்பட்டது, இந்த வாகனம் யாருடையது என தெரியவில்லை. ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வாகன விபரம் கொடுத்து விசாரிக்கிறோம். நள்ளிரவில், காவிரி ஆற்றின் ஈரோடு கரை மற்றும் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதி கரையிலும் இதுபோன்று சாய துணிகள், பெட்ஷீட்களை அலசுவது தெரியவந்தது. இதுபற்றி, நாமக்கல் கலெக்டருக்கும் கடிதம் அனுப்பி உள்ளோம், என்றார்.


கொண்டாடிய நிருபர்கள்: சாயத்துணி, பெட்ஷீட் அலசும் தகவல் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கும், அவர்கள் மூலம் போலீசாருக்கு சென்றது. போலீஸ் மூலம் சில நிருபர்களுக்கு தகவல் சென்றது. நிருபர்கள், புரோக்கர்ககளை தொடர்பு கொண்டதால், துணி அலசுபவர்களுக்கே தகவல் சென்று தப்பினர். அலசியவர்கள் சிக்கினால் சில ஆலைகள் மீது நடவடிக்கை, சீல் வைப்பு, பல லகரம் இழப்பு ஏற்படும். இதற்கு உதவியதற்காக சில நிருபர்கள், அவர்களுக்கு உதவிய 'காக்கி'க்கும் ஆலைகள் தரப்பினர் ஏகமாக கவனித்ததால் உற்சாகமடைந்தனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X