சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் ஒரே நபர் பெயரில் 300 நகை கடன்கள் வழங்கியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 125 தொடக்க கூட்டுறவு கடன் சங்கம், 35 மத்திய கூட்டுறவு வங்கிகள், நிலவள வங்கி என 150 வங்கிகள் மூலம் நகை கடன் வழங்கப்பட்டுள்ளன. இதில் அரசின்் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பில் பயனடையும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் நகை கடன் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரின்பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் குன்றக்குடி தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் ஒரே நபர் பெயரில் தலா 5 பவுன் நகையாக பிரித்து காண்பித்து 300 கடன்கள் ஒரே பெயரில் வைத்து முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இது போன்று ஒரே நபர் 300 நகை கடன்கள் மூலம் ரூ.65 லட்சம் வரை கடன் பெற்றுள்ளது தெரிந்துள்ளது.
இது குறித்து கூட்டுறவு இணை பதிவாளர் ரவிச்சந்திரன் கூறியதாவது, இங்கு 98 ஆயிரத்து 955 நபர்களுக்கு நகை அடமான கடனாக ரூ.510.98 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் 5 பவுனுக்கும் கீழ் 86 ஆயிரத்து 155 பேர் ரூ.378.27 கோடி கடனாக பெற்றுள்ளனர். ஒரே நபர் பெயரில், ஒரே ஆதார் கார்டை வைத்து குன்றக்குடியில் நகை கடன் வழங்கியது குறித்து விசாரிக்கிறோம், என்றார்.