கோவில்பாளையம்;எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில், ஏழு ஊராட்சிகளில், மெகா துாய்மைப் பணி நடந்தது.தமிழகத்தில் பருவமழை துவங்கியுள்ளது. இதையடுத்து மழை நீர் செல்லும் வடிகால்கள், பாலங்கள், பள்ளங்கள், ஓடைகள் ஆகியவற்றை சுத்தப்படுத்தி, மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, எஸ்.எஸ்., குளம் ஒன்றியத்தில், கொண்டையம்பாளையம், அத்திப்பாளையம், வெள்ளமடை, கீரணத்தம், வெள்ளானைப்பட்டி, கள்ளிப்பாளையம், அக்ரஹார சாமக்குளம் ஆகிய ஏழு ஊராட்சிகளில், துாய்மை பணியாளர்கள், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை வைத்து சாக்கடை வடிகாலில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டன. மழை நீர் செல்லும் பாதையில் இருந்த மண்மேடுகள் அகற்றப்பட்டன. சிறு பாலங்களின் கீழ் உள்ள குழாய்கள் இயந்திரங்கள் வாயிலாக துாய்மைப் படுத்தப்பட்டன."இப்பணி தொடர்ந்து, 25ம் தேதி வரை நடைபெறும். மழை நீர் தங்கு தடையின்றி செல்லவும், எங்கும் தேங்கி நிற்காதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என, வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) தனலட்சுமி தெரிவித்தார்.இதேபோல் அன்னுார் ஒன்றியத்தில், பிள்ளையப்பன்பாளையம், குப்பனுார், பொகலுார் ஊராட்சிகளிலும், மழை நீர் தங்கு தடையின்றி செல்ல துாய்மைப்படுத்தும் மெகா முகாம் நடந்தது.