பொள்ளாச்சி;பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, நெகமம் பகுதியில், கடந்த, 35 ஆண்டுகளாக, மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மஞ்சள் ஆண்டுப்பயிரால் இழப்பு ஏற்படாதென நம்பிக்கையும் தெரிவிக்கின்றனர்.கிணத்துக்கடவு பகுதியில், கடந்த, 35 ஆண்டுகளுக்கு முன் வரை, 10 மாத பயிரான மஞ்சள் சாகுபடி பிரதானமாக இருந்தது. விவசாயிகள் ஒவ்வொருவரும், இரண்டு ஏக்கரில் இருந்து, 10 ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி மேற்கொண்டனர்.ஆள் பற்றாக்குறை, பாசன நீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், விவசாயிகள் மஞ்சள் சாகுபடியை கைவிட்டு, தென்னை மற்றும் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நெகமம், கிணத்துக்கடவு பகுதியில் சில விவசாயிகள் மஞ்சள் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.இவர்களில், சிங்கையன்புதுார் பத்ரகாளியம்மன் கோவில் தோட்டத்தில், கடந்த, 35 ஆண்டுகளாக, மஞ்சள் சாகுபடி மேற்கொள்ளும், விவசாயி ஸ்ரீரங்கம்மாள் கூறியதாவது:தோட்டம் முழுவதும் மஞ்சள் சாகுபடி செய்திருந்தோம். தக்காளி, கத்தரி, செடிஅவரை உள்ளிட்ட குறுகிய காலத்தில், லாபம் தரக்கூடிய சாகுபடிகள் அறிமுகமானதும், ஆண்டு பயிர்கள் அத்தனையும் மறந்து போய்விட்டன.இருப்பினும், அரை ஏக்கரில் தொடர்ந்து, நாட்டு ரக மஞ்சள் சாகுபடி மேற்கொண்டு, தற்போது, மூன்று ஏக்கர் அளவுக்கு சாகுபடி செய்துள்ளோம். மஞ்சள் சாகுபடிக்கு மண் வளம் முக்கியம். மண்ணுக்கு சத்து கிடைக்க, தொழு உரம் அவசியம்.பலமுறை உழுத நிலத்தில் தொழு உரமிட்டு, மீண்டும் ஒருமுறை நன்றாக உழவு மேற்கொண்டு, மஞ்சள் விதைப்பு மேற்கொள்ள வேண்டும். சொட்டு நீர் பாசன வசதி இருந்தாலும், வாரம் ஒரு முறை கால்வாய் பாசனம் மேற்கொள்ளப்படுகிறது.பொதுவாக, நீர் பாசனத்தில் மஞ்சள் சாகுபடி மேற்கொண்டாலும், மழையும் அவ்வப்போது பெய்ய வேண்டும். உரம் அதிகமாக பயன்படுத்துவது இல்லை. நோயும் பெரிய அளவில் இருக்காது; வந்தாலும், மருந்து தெளித்து நீக்கி விடுவோம். மஞ்சள் சாகுபடிக்கு, பராமரிப்பு செலவு குறைவு தான். அவ்வப்போது களை மட்டும் எடுக்க வேண்டும்.அறுவடைக்கு பின், மஞ்சளை, அதன் சருகுகளை கொண்டே வேகவைத்து, உலர வைக்க வேண்டும். மஞ்சள் கிழங்கில் நீர் வற்றியவுடன், சாக்குகளில் சேமித்து, விலை உயரும் போது, ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்கிறோம். மஞ்சள் சாகுபடியில் எப்போதும் இழப்பு கிடையாது.எங்களிடம் இருந்து, சில விவசாயிகள் விதை மஞ்சள் வாங்கிச் சென்று விதைப்பும் செய்கின்றனர். தற்போது, மறந்து போன மஞ்சள் சாகுபடிக்கு மீண்டும் புத்துயிர் கிடைப்பது மகிழ்ச்சியளிக்கிறது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.கிணத்துக்கடவு வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோமதி கூறுகையில், ''மஞ்சள் சாகுபடியில், ஒருசில இடங்களில் விவசாயிகள் சிறிய அளவில் மேற்கொள்கின்றனர். மஞ்சள் சாகுபடியை ஊக்குவிக்க துறை ரீதியான சிறப்பு திட்டம் ஏதுமில்லை. இருந்தாலும், கிணத்துக்கடவு பகுதியில் மஞ்சள் சாகுபடி மீண்டும் துளிர்விட்டுள்ளது குறித்து, அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.