பொள்ளாச்சி;பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் வர்த்தகம் தொடர்ந்து சரிந்து வருவதால், அண்டை மாநில வியாபாரிகள் பங்கேற்க அனுமதியளிக்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகத்துக்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தின் மிகப்பெரும் மாட்டுச்சந்தைகளில், பொள்ளாச்சி மாட்டுச்சந்தையும் ஒன்று. வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடக்கும் இச்சந்தையில், தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஒரு மாதமாக சந்தை நடத்த, மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்நிலையில், வெளிமாநில நபர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளூர் வியாபாரிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டு, கடந்த, 21ம் தேதி சந்தை நடத்தப்பட்டது.அப்போது, வழக்கமாக, ஐந்து கோடி ரூபாய் அளவில் நடக்கும் வர்த்தகம், மூன்று கோடிக்கு மட்டுமே நடந்தது. இந்நிலையில், நேற்று நடந்த ஏலத்தில், இரண்டு கோடி ரூபாய் அளவில் மட்டுமே வர்த்தகம் நடந்துள்ளதாகவும், மூன்று கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதித்துள்ளதாகவும், வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.மாட்டுச்சந்தை வியாபாரிகள் கூறியதாவது:மாட்டுச்சந்தையால், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். இந்நிலையில், வெளி மாநிலத்தவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வர்த்தகம் பாதிக்கிறது. பலரும் வேலைவாய்ப்பு இழந்துவருகின்றனர்.மாவட்ட நிர்வாகம், வெளிமாநிலத்தவர்கள் சந்தையில் பங்கேற்க கூடுதல் தளர்வுகள் அளிக்க வேண்டும். இரண்டு 'டோஸ்' தடுப்பூசி செலுத்தியோர் அல்லது, 72 மணி நேரத்துக்குள் 'டெஸ்ட்' எடுத்து கொரோனா இல்லை என்ற சான்று வைத்துள்ளவர்களை சந்தையில் அனுமதிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் தளர்வுகள் அறிவித்தால் மட்டுமே, வர்த்தகம் சூடுபிடிக்கும்.இவ்வாறு, வியாபாரிகள் தெரிவித்தனர்.