பொள்ளாச்சி;'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க, குழு அமைத்து கண்காணிக்கப்படும்,' என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் மாலை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமைக்கு எதிரான கண்காணிப்பு குழுவின், ஆலோசனைக்கூட்டம் நடந்தது.குழுவின் தலைவர் சப் - கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், தாமோதரன் மற்றும் அமுல்கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார்கள், டி.எஸ்.பி.,க்கள் மற்றும் பழங்குடியின மக்கள் பங்கேற்றனர்.அதிகாரிகள் பேசியதாவது:பழங்குடியின மக்களின் கோரிக்கைகள் அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. தாமதமின்றி விரைவில் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும். பொள்ளாச்சி நகரம், நெகமம், கஞ்சம்பட்டி மற்றும் காட்டம்பட்டி பகுதிகளில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. 'போக்சோ', ஜாதி ரீதியான பிரச்னைகளும் நடக்கிறது. இவற்றை தடுக்க தனிக்குழு அமைக்கப்பட்டு, அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு செய்யப்படும். பாதுகாப்பான, ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்த, அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்படும்.இவ்வாறு, பேசினர்.பழங்குடியினர் கூறியதாவது:வால்பாறை, கல்லார் செட்டில்மென்ட் பகுதியில் பழங்குடியினர், 23 குடும்பங்கள் வசித்து வருகிறோம். 2019ல் வெள்ளம் ஏற்பட்டதில், அனைத்து குடிசைகளும் அடித்துச்செல்லப்பட்டன. தற்போது, தனியார் எஸ்டேட் பகுதியில் தங்கி வருகிறோம். நாங்கள் விரும்பும் இடத்தில், விரைவில் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுத்து, அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். பழங்குடியின மக்களுக்கான அரசின் நலத்திட்டங்களை தாமதமின்றி வழங்க வேண்டும்.வனத்துறை பணிகளில் பழங்குடி மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தர வேண்டும். அனைத்து செட்டில்மென்ட்களிலும் அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும்.இவ்வாறு, பழங்குடியினர் தெரிவித்தனர்.