ஊட்டி:ஊட்டி நகரில் திருட்டு சம்பவத்தை தடுக்க, 200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.ஊட்டி நகரில், 36 வார்டுகள் உள்ளன. 'ஏ.டி.சி., கமர்சியல் ரோடு, சேரிங்கிராஸ், பஸ் ஸ்டாண்ட், ஹில் பங்க், பிங்கர் போஸ்ட், ஸ்பென்சர் சாலை, அரசு மருத்துவமனை சாலை,' என, பெரும்பாலான பகுதிகளில் கடை, வணிக நிறுவனங்கள் அதிகளவில் செயல்படுகிறது. அத்தியாவசிய தேவைக்கு உள்ளூர் உட்பட வெளி மாவட்ட மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஊட்டிக்கு வருகை தருகின்றனர்.சமீப காலமாக, ஊட்டி நகரில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் உள்ள கடை, வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தாததால் திருட்டு சம்பவத்தை கண்டுபிடிக்க போலீசார் திணறினர்.200 கண்காணிப்பு கேமராக்கள் திருட்டு சம்பவத்தை தடுக்கும் வகையில், போலீ சார் கடை, வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களை அழைத்து கேமரா பொருத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.'கட்டாயம் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்,' என, அறிவுறுத்தினர்.போலீசார் கூறுகையில்,' போலீசாரின் அறிவுரை ஏற்று, கடை உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளித்து, ஊட்டி நகரில், 200 கண்காணிப்பு கேமரா பொருத்தி உள்ளனர். புறநகர் பகுதிகளிலும் வரும் நாட்களில் கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.